உள்ளுர் உணவுகளை உருவாக்கும் பெண்களைக் கொண்டாடுவோம். எமது ஊர்களில் வாழும் அம்மாக்கள் ஆளுமை நிறைந்தவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு அமைதியாகவும் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றியும் பல சாதனைகளை நிலை நாட்டியவர்கள். கணவனை இழந்த நிலையிலும், கணவன் தொழில் செய்ய முடியாது வீட்டினுள் முடங்கிய சூழலிலும் குடும்பத்தைத் தலைமையேற்று வழி நடத்திய அம்மாக்கள் பலர் நமது ஊர்களிலே வாழ்ந்து வருகின்றார்கள்.
எதிர்பாராத வகையில் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை வழங்கிய கணவன் முடங்கிய சூழ்நிலையில் குடும்பத்தின் வாழ்வியலுக்கான பொருளாதாரத்தை புதிதாக உருவாக்கி அதனூடாகத் தனது குடும்பத்தை மேம்படுத்திய உள்ளுர் ஆளுமைகளாக இந்த அம்மாக்கள் வாழ்கிறார்கள்.
இவ்வாறு சடுதியாக தனித்து நின்று வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வல்லமைகள் அம்மாக்களுக்கு எவ்வாறு வாய்க்கப்பெற்றன என்றால் அதற்கு அம்மாக்கள் தமது சிறு பராயத்திலிருந்து செயல்முறையூடாகக் கற்றறிந்து கொண்ட உள்ளுர் அறிவு திறன் சார்ந்த அனுபவங்களும் மனப்பாங்குகளுமே காரணம் எனலாம்.
அதாவது வீட்டிலும், ஊரிலும் பயிலப்பட்ட கைவினையாக்கங்களில் பெற்ற அறிவு, அனுபவங்கள், விதம் விதமான உள்ளுர் உணவுகளைத் தயாரிப்பதில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள், தையல் கலையில் ஈடுபட்ட அனுபவங்கள், வீட்டுத்தோட்டங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவங்கள், கால்நடைகளைப் பராமரித்து வளர்த்த அனுபவங்கள் முதலானவையே குடும்பத்தின் வாழ்வாதாரம் சூனியமாகிப் போன சூழலிலும் பீனிக்ஸ் பறவைகளைப்போல் அம்மாக்களை மீண்டெழச் செய்திருந்தன.
இவ்வாறு தற்சார்புடன் குடும்பத்தையும், ஊரையும் மீண்டெழச் செய்த ஆளுமையான அம்மாக்களைக் கொண்டாடும் நோக்கில் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான நூறு கோடி மக்களின் எழுச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று நமது நாடு பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ள சூழலில் மேற்படி ஆளுமையான அம்மாக்களின் வல்லமைகளை புதிய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. அதாவது வாழ்வாதாரமே சூனியமாகிப் போன நிலையில் துவண்டு விடாமல் தம்மிடமுள்ள அறிவையும், ஆற்றலையும், அனுபவங்களையும் மூலதனமாகக் கொண்டு வாழ்வின் சவால்களை எதிர்த்து மீண்டெழுந்த ஒவ்வொரு அம்மாக்களின் கதைகளையும் உரத்துப் பேச வேண்டியுள்ளது.
இந்தவகையில் இத்தகைய அம்மாக்களின் வகிபாகத்தை கலையாக்க நடவடிக்கைகளுடாக பொது வெளியில் உரையாடும் வகையில் நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன.
அம்மாக்களின் வாழ்வாதாரத்திற்கான மூலங்களுள் ஒன்றாக உள்ளுர் உணவுகளின் உருவாக்கமும் பரிமாற்றமும் விளங்கி வருகின்றன. சுவையாகவும், சுத்தமாகவும், தரமாகவும், மலிவாகவும் அம்மாக்கள் உணவு வகைகளை உருவாக்கி அவற்றைப் பரிமாற்றம் செய்வதனூடாக தமக்கான வாடிக்கையாளர்களையும் வருவாய்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு தமது வாழ்வில் உள்ளுர் உணவு வகைகளை உருவாக்கி அவற்றைப் பரிமாற்றஞ் செய்து வாழ்வுக்கான வருவாய்களை ஈட்டி அழகானதும் மகிழ்வானதுமான வாழ்வை வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற பெண் ஆளுமைகளை மாண்பு செய்து அவர்தம் அனுபவங்களை உரையாடலுக்குக் கொணரும் நோக்கிலும். உள்ளுர் உணவுப் பரிமாற்றம் எவ்வாறு உள்ளுர் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றது என்பதையும் கவனத்திற்குட்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு சீலாமுனையில் 14.02;.2023 ஆந் திகதி மாலை 4:30 – 06:00 மணி வரை மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
சீலாமுனையில் உள்ளுர் உணவு உருவாக்கம் அவற்றின் பரிமாற்றம் என்பவற்றினூடாக தமக்கான வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வாழ்ந்து வரும் பெண் ஆளுமைகள் இதில் மாண்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களாக பங்குபற்றவுள்ளனர்.
து.கௌரீஸ்வரன்