Home இலங்கை நூறுகோடி மக்களின் எழுச்சி 2023 – வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள்!

நூறுகோடி மக்களின் எழுச்சி 2023 – வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள்!

by admin

 

மூன்றாவது கண்

நூறு கோடி மக்களின் எழுச்சி 2023 இனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஓவியச்செயல்வாதத்தின் படைப்பாக்கப் பதிவாக இப்பிரசுரம் ஆக்கப்பட்டுள்ளது. அதாவது வந்தாறுமூலையை சேர்ந்த காண்பியக்கலையின்பால் ஈடுபாடுடைய இளையோருக்கு இந்த ஓவியப்படைப்பாக்கத்திற்கான பயிற்சிப்பட்டறை மேற்கொள்ளப்பட்டது.

வீடுகளில் பெண்கள் செய்யும் வேலைகள் மற்றும் பெண்களின் உடல் உழைப்புக்கள் பெறுமதியானவையாகக் கொள்ளப்படாத பண்பாட்டுச் சூழலில், கடந்த காலங்களில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து உள்ளூர் அறிவையும் திறனையும் அடிப்படையாகக் கொண்டு தமது கடின உழைப்பால் தமக்கான வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தி சமூகத்தில் முன்மாதிரியான ஆளுமைகளாக வாழ்ந்து வரும் பெண்களின் பிரதிமைகளை வரைய அப்பயிற்சிப்பட்டறையின் ஊடாக இளம் ஓவியர்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தாங்கள் கண்ட, அறிந்த, தாம் விரும்பிய தமது சூழலில் (வந்தாறுமூலை) வாழும் பெண் ஆளுமைகளைச் சந்தித்து உரையாடிய பின்னர் இளம் படைப்பாளிகளால் ஆக்கப்பட்ட காண்பியக்கலைப் படைப்புக்கள் இக்கையேட்டில் தொகுக்கப்பட்டுள்ளன.

இக்கலைச் செயல்வாதம் தமது சூழலில் தற்சார்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் பெண் ஆளுமைகளைப் பற்றியும் அவர்களது முக்கியத்துவம் தொடர்பாகவும் இளந்தலைமுறையினர் மேலும் ஆழமாக அறிந்து விளங்கிச் செயலாற்றத் தூண்டும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஓவியத்தை மையப்படுத்திய ஒரு செயல்வாதமாகும்.
பங்குபற்றிய இளம் ஓவியர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் புத்தாக்கச் சிந்தனையுடனும் ஆக்கபூர்வமாக இதனைப் படைப்பாக்கியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் வாழ்த்துகின்றோம்
அவர்தம் படைப்புக்களைப் பொது வெளியில் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.

எடுத்தாளுனர்கள்
சுசிமன் நிர்மலவாசன், து.கௌரீஸ்வரன்


சஸ்னி பகீரதன் 2004
‘மருத்துவிச்சி மகேஸ்வரி’
கடதாசியில் நீர்வர்ணம்
30cmx42 cm

கணபதிப்பிள்ளை மகேஸ்வரி
மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை எனும் கிராமத்தில் 1947 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 25 ஆந் திகதி மருத்துவிச்சி மகேஸ்வரி பிறந்தார். தனது முயற்சியால் மருத்துவிச்சிக்கான அறிவையும், ஆற்றலையும் கற்றுக் கொண்டார் ஊரில் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவம் பார்த்து வந்தார். இவர் ஒரே நாளில் மூன்று பெண்களுக்கு பிரசவம் பார்த்த அனுபவம் பெற்றவர்.

தனது வாழ்நாளில் ஏராளமான கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவம் பார்த்துள்ளார். தனது கற்பனையின் ஊடாக கர்ப்பிணித் தாய்மார்களின் வலிகளை உணர்ந்து கொள்வதனால் இந்தச் சேவையில் வெற்றி கண்டுள்ளார். தற்போது இவருக்கு 76 வயதாகிறது. தனது முதுமை நிலை காரணமாக இச்சேவையினைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் சில வருடங்களிற்கு முன்பாக நிறுத்திவிட்டார். அதுவரை எந்தவிதப் பிரச்சினையும் இன்றித் தனது முழு மனதுடன் இந்தச் சேவையினை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் நவீன வைத்தியர்களுடன் இணைந்தும் பிரசவம் பார்த்துள்ளார். இதுவே மருத்துவிச்சி மகேஸ்வரியின் கதையாகும்.

சச்சிதானந்தம் சசிரேகா
1995
‘கனகம்மா, பொன்னாச்சி’ கித்தான் மீது பேனா மை, கரி, தேயிலைச்சாயம்;, 89cmx59 cm
இளையதம்பி கனகம்மர்

வந்தாறுமூலை மேற்கைச் சேர்ந்த இளையதம்பி – கனகம்மா என்பவர்; 1946/04/30 அன்று பிறந்துள்ளார். இவர் பாய், சுளகு, பிரம்புக் கூடைகள், பிரம்பு தொட்டிலகள்; உருவாக்குதல், மற்றும் தையல், மரக்கறித் தோட்டம், மூங்கில் வளர்ப்பு கோழி வளர்ப்பு என்பவற்றை இன்றுவரை செய்து வருகின்றார்.தனக்கு பாடசாலை செல்லும் போது இருந்தே கைப்பணி வேலையில் ஆர்வம் இருந்ததாகவும் தன்னுடைய ஆசிரியர்கள் மூலம் தான் தையல், பாய் பின்னுதல் போன்றவற்றை கற்றுக்கொண்டதாகவும் கூறினார் . இவருக்கு 04 பெண்களும்,03 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு தற்போதும் தன்னுடைய சுயதொழில் முயற்சிகளைத் தொடர்ந்து வருகின்றார்

சின்னத்தம்பி -பொன்னாச்சி
1956ஃ01ஃ04 பிறந்துள்ளார். சுளகு, கைப்பெட்டி என்பவற்றைச் செய்து வருகிறார். தன்னுடைய கணவர் தனக்குக் கற்றுக் கொடுத்த இக்கலையை நன்கு கற்று இருவரும் இத்தொழிலை செய்து வந்துள்ளனர்.

வனோஜன் சிவசோதி 2004

‘விவசாயி சீதேவி’
துணிமீது பேனா மை, அக்ரலிக் வர்ணம்
150cmx75 cm
விவசாயி – சீதேவி
எல்லை வீதி மாவடிவேம்பில் வசிக்கும் கிருஷ்ணப்பிள்ளை சீதேவி என்பவர் தனது திருமணத்தின் பின் கணவனோடு சேர்ந்து விவசாய வேலையில் ஈடுபட்டார். தன் கணவன் இறந்த பிறகும் தொடர்ந்து விவசாய வேலைகளைச் செய்து வந்தார். தன்து ஏழு பிள்ளைகளையும் தன் தாயோடு சேர்ந்து வளர்த்து ஆளாக்கினார். கடைசிப்பிள்ளை பிறக்க முன் கணவர் இறந்தார். விவசாயி – சீதேவி விவசாயத் தொழில் முயற்சியால் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். தன் மகனோடு சேர்ந்து இன்று வரை பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் விவசாயம் செய்து கொண்டு இருக்கிறார்.


வினோஜன் கஜேந்திரன்
2004

‘நவயுகநாயகி ‘
கலப்பூடகம்
நவயுகநாயகி
நவயுகநாயகி என்பவர் 1951 ஆண்டு பிறந்தார் இவர் வந்தாறுமூலையில் வசித்து வருகின்றார். பாலிப்போடி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் 4 பிள்ளைகளின் தாயார். தனது கணவன் இறந்த பின்னர்;; தனது தாயிடமிருந்து கற்றுக் கொண்ட தையல் கலையினை சுயதொழிலாகக் கொண்டு வாழ்வுக்கான ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டார். இப்பொழுதும் தையல் தொழிலைச் செய்து வருகின்றார்.
சிறிது காலம் வந்தாறுமூலை, கிரான், கொம்மாதுறை போன்ற இடங்களில் காணப்படும் பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தையல் தொழிலால் அக்காலத்தில் மாத வருமானமாக 1000 ரூபாவினை பெற்று 3 பிள்ளைகளையும் வளர்த்துவந்தார். இவர் 64 வருடமாகத் தையல் கலையைச் சுயதொழிலாகக் கொண்டு தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றார். இன்று வரை அத்தொழிலைக் கைவிடவில்லை.

மது.எம்;
2005
‘மாதவி’
கடதாசி மீது
சுண்ணவர்ணம்
30cmx 21 cm
மாதவி
செல்லத்தம்பி மாதவி என்பவர் 1948.05.01 பிறந்தார் இவர் செல்லத்தம்பி என்பவரை திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றார் மேலும் ஆரம்பத்தில் சந்தைக்கு சென்று வியாபாரம் செய்து அதில்வரும் பணத்தின் மூலம் தனது இல்லறத்தை நடத்தி வந்தார். பின்னர் இவருடைய கணவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இவர் எண்ணை உருக்கி அதனைச் சந்தையில் கொண்டு வியாபாரம் செய்து தனது குடும்பத்திற்கான வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொண்டார். இன்று தனி நபராக வாழ்கின்ற போதும் தனது எண்ணை உருக்கும் தொழிலை இன்று வரை கைவிடவில்லை. தனக்கு 75 வயதான போதும் எண்ணை உருக்குதல், சந்தைக்கு செல்லல் போன்ற தொழில்களை இன்று வரை மேற்கொண்டு வருகின்றார்

 

ரமேஸ்குமார் ஜஹாங்கன்
2004

 

யோகம்
வந்தாறுமூலை தேவாலய வீதியில் வசிக்கும் யோகம் என்பவர் 1962.02.06 அன்று பிறந்தார் இவருக்கு தற்போது 61 வயது .இவருக்கு ஐந்து பிள்ளைகள் ஒரு ஆணும், நான்கு பெண்பிள்ளைகளும் ஆகும். கணவனை இழந்து 23 வருடமாகிறது .ஆயினும் சுயமுயற்சியால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக சுவையகத்தை 31 வருடமாகத் தொடர்ந்து நடத்தி வருகிறார். தனது சுவையகம் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.வந்தாறுமூலை மக்கள் மத்தியில் மட்டுமின்றி பிற ஊர் மக்களிடமும் இவரது சுவைமிகுந்த கடலை உணவு பிரபலம் பெற்றுள்ளது. இவர் இத் தொழில் மூலம் தனதுபிள்ளைகளை நன்கு முன்னேற்றி வாழ்ந்து வருகிறார்.


தில்லையம்மா
வந்தாறுமூலை செட்டியார் வீதியில் வசிக்கும் செல்வம் தில்லையம்மா அவர்கள் 1952.05.30 ஆந் திகதி பிறந்தவர் தற்போது 70 வயது . இவருக்கு மூன்று பெண்பிள்ளைகள். கணவனை இழந்த பின்னர் ஓலை இழைத்தல்,விறகு வெட்டி விற்றல் மூலமாக வாழ்ந்து வந்தார். கடந்த எட்டு வருடங்களாக பக்கவாதம் மூலம் தனது ஒரு கை செயலிழந்த போதிலும் வேலைசெய்துதான் ஆகவேண்டும் என்ற முயற்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

 

 

புவனேசராசா கௌஷாலினி
2002


‘சுந்தரம் ‘
கலப்பூடகம்
23உஅஒ51 உஅ

சுந்தரம்
வந்தாறுமூலை பாடசாலை வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சுந்தரம் என்பவர் 1943.12.24 அன்று பிறந்தார். திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தாயாகினார்;. இதில் ஒரு பெண் பிள்ளை காலமாகி விட்டார். இவரின் கணவர் இறந்து 11 வருடம் பூர்த்தியாகும் நிலையில் கடந்த 35 வருட காலமாக சுயமுயற்சி மூலம் சிறுகடை வியாபாரியாக தனக்குத் தேவையான வருமானத்தை ஈட்டி வருகின்றார். இவர் வியாபாரி மட்டும் அல்லாது மருத்துவிச்சி ஆகவும் அறியப்படுகிறார். பரம்பரை பரம்பரையாகச் செய்து வரும் நாட்டு வைத்தியத்தினை இவர் ஐந்தாவது தலைமுறையாக இன்று வரை தொடர்ந்து வருகின்றார்.

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More