முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை தலா ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இமாட் சுஹேர் என்பவருக்கு 2014 ஆம் ஆண்டு சட்டபூர்வமான ஆவணம் இன்றி மத்திய வங்கிக்கு சொந்தமான 6.5 மில்லியன் டொலர்களை வழங்கியமை தொடர்பில் தீனியாகல பாலித்த தேரர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதால், கடந்த 26 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிவித்தல் நீக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் வௌிநாடு செல்வதானால், அதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் அறிவித்தார்.
தமது சேவை வழங்குநருக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அறிவித்தல் இதுவரை கிடைக்கவில்லையென்ற போதிலும், இன்றைய தினம் வழக்கு விசாரணை இடம்பெறுவதாக ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தமையினால், தன்னார்வமாக முன்வந்ததாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.