உலக தாய் மொழிகள் தினமானது ஆண்டுதோறும் மாசி மாதம் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரவர் மொழிப்பண்பாட்டை கொண்டாடும் வகையிலும் அதேநேரம் மற்றவர் மொழிப்பண்பாடுகளை மதிக்கும் வகையிலும் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுதல் வேண்டும் என்பதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பிய மையவாதமும், காலனிய சிந்தனையும் மக்களை மையம் விளிம்பு என கூறுபடுத்தியிருப்பதன் விளைவு, உலக தாய்மொழிகள் தினமாக அன்றி, உலக தாய்மொழி தினம் என்ற பெயரில் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன் மற்றொரு பெரும்போக்கு யாதெனில் அவரவர் தாய்மொழிகளை விடுத்து வேற்று மொழியில் பயிலச் செய்வதாக இருந்துவருகின்றது. வேற்று மொழி கல்வியறிவு அவசியமானதெனினும் அது தாய் மொழி கல்வியறிவு மறுப்பாக அமைந்து விடலாகாது.
குறிப்பாக தமது தேவையின் நிமித்தம் வெவ்வேறு மொழிகளை பயிலுதலில் எவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டுகின்றார்களோ, அதேஅளவு மற்றவர் மொழிப்பண்பாடுகளை போற்றவும் மதிக்கவும், அவரவர் மொழி உரிமைகளை மதிக்கவும் பேணுவுமான மனித சமூகங்களின் உருவாக்கம் என்பதும் அவசியமாகின்றது.
அத்தகைய மனித சமூகங்களின் மொழிப்பயன்பாடு அல்லது மொழிப்பிரயோகம் என்பது எந்தவகையிலும் வன்முறையை தூண்டாத, மற்றவரை துன்பப்படுத்தாத, சங்கடங்களுக்கு உட்படுத்தாத மொழிப்பிரயோகமாக இருத்தலும் அவசியமாகின்றது.
சுருக்கமாகச் சொன்னால் சமத்துவமான, முற்போக்கான, எந்தவகையிலும் வன்முறைகளை வெளிப்படுத்தாத, மனித சமூகத்தை மாண்பு செய்கின்ற, மொழி பயன்பாடு என்பது அவசியமானது என்பதாகும்.
இந்தவகையில் சமத்துவமான வாழ்தலை நோக்கிய பயணத்தில் மூன்றாவதுகண் நண்பர்கள், இந்த வருடம் உலக தாய்மொழிகள் தினத்தினை செவிவழியேறல் மற்றும் நினைவாற்றலினுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கொண்டாட இருக்கின்றனர்.
குறிப்பாக சிறந்த பெறுபேறுகள் என்றவகையில் பெறுபேறுகளை கொண்டாடுகின்ற கல்விமுறையில் பல்துறை ஆளுமை உருவாக்கம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன், அத்தகைய ஆளுமை வெளிப்பாட்டிற்கான தளம் போட்டியை மையப்படுத்திய எழுத்துப்பரீட்சையில், மறுக்கப்பட்டு விடுகின்றது.
இந்நிலையில் செவிவழியேறல் என்பது கேட்டலின் ஊடாக கிரகித்துக் கொள்ளல் என்பதற்கான வாய்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக எங்களுடைய பாரம்பரிய அரங்க வெளியில் செவிவழியேறல் கற்றல் முறையாக முக்கிய இடத்தை பெறுகின்றது. குறிப்பாக பாடமாக்கி ஒப்புவித்தலோடு சுருக்கப்பட்டுள்ள கல்வி முறையில் செவிவழியேறலாக நினைவில் இருத்திக் கொள்ளல் அல்லது செவிவழியேறலாக கிரகித்துக்கொள்ளல் என்பதற்கான வாய்ப்பும் ஏகபோகமாக மறுக்கப்பட்டு விடுகின்றது. அப்படியே கேட்க வேண்டிய தேவை ஏற்பட்டாலும் ஒலிப்பதிவாக்கி வைத்துக் கொள்ளல் என்பதே பெருவாரியான நடைமுறையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. முற்றுமுழுதுமாக மனிதர் தங்கிவாழ்பவர்களாக மாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில் அவரவர் நினைவு கொண்டாட்டத்திற்குரியது என்பது தொழிநுட்ப சாதனங்களின் நினைவகங்களில் சேமித்து வைத்துக் கொள்ளல் அல்லது பதிவேற்றி வைத்துக் கொள்ளல் என்ற நடைமுறையின் பின்னராக மறக்கடிக்கப்பட்டிருக்கின்றது.
மிகச் சிறப்பாக தொழிநுட்ப சாதனங்களின் வருகையின் பின்னராக காலப்பகுதிகளில் படிப்படியாக மனித நினைவாற்றல் புறமொதுக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் தொழிநுட்ப சாதனங்களில் தங்கியிருக்கும் மனிதர்களாக மனித சமுகம் மாற்றப்பட்டு விட்டது.
குறிப்புகளாக இருக்கட்டும், மிகச்சாதாரண விடயங்களாக இருக்கட்டும், அன்றாட விடயங்களாக இருக்கட்டும் இவையெல்லாவற்றிற்கும், இன்னபிறவற்றிற்கும் தொழிநுட்ப சாதனங்களில் தங்கி வாழ்கின்றவர்களாக மனிதர்கள் மாற்றப்பட்டு விட்டார்கள். மனிதர்களின் நினைவாற்றல் என்பது புறமொதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில். அவரவர் அறிவையும் திறனையும் கொண்டாடுவதும், மனித நினைவில் வைத்திருத்தலின் அவசியத்தை வலியுறுத்துவதும் அவசியமாகின்றது.
பாடத்திட்டங்களுக்குள் மட்டுப்பட்டு பரீட்சைகளில் புள்ளிகளை பெறுதலை நோக்காகக் கொண்ட கல்வி முறையில் பாடமாக்கி ஒப்புவித்தல் போதுமானதாகவே இருந்து வருகின்றது. இவ்வாறு பாடமாக்கி ஒப்புவித்தலோடு சுருக்கப்பட்டுள்ள கல்விமுறையில் சமூக எதிர்வினையாற்றல் இல்லாதிருப்பதுடன், கல்வியின் மெய்யான அடைவும், மெய்யான அறிவுருவாக்கம் என்பதும் சாத்தியமற்றதாகவே இருந்து வருகின்றது.
மேலும் எந்த கேள்விகளுக்கும் இடம்கொடுக்காத அதேநேரம் பரீட்சைகளோடு மட்டுப்படுத்தபட்ட கேள்விகளில் சமூக உருவாக்கம் என்பதும் போட்டிமனபாங்கோடே கட்டமைக்கப்பட்டு விடுகின்றது. இத்தகைய போட்டிமனபாங்கோடு கூடிய சமூக அமைப்பில் தனிதனியனாகவே இயங்குவதற்கும் வாழ்வதற்கும் மனிதர்கள் பழக்கப்பட்டு விடுகின்றார்கள்.
இத்தகைய போட்டிதன்மையோடு கட்டமைக்கப்பட்டுள்ள சமூக அமைப்பில் சூழலை வாசித்தலுக்கான வாய்ப்பும் மறக்கப்பட்டு விடுகின்றது. இந்நிலையில் பாடத்திட்டம் கடந்த புற வாழ்க்கையை பெரும்பாலும் சமூக ஊடகங்களும், ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற அல்லது வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்களே தகவமைத்து விடுகின்றன.
பெரும்பாலும் அவை மிகச்சாதாரணமாக வன்முறையான மொழிபிரயோகத்திற்கும் வழிவகை செய்கின்றன. இந்நிலையில் ஏன், எதற்கு என்ற கேள்விகளற்ற கல்வி நடைமுறையும் இத்தகைய வார்த்தை வன்முறையை சாதாரண புழக்கத்தில் மிகமிக இலாவகமாக பயன்படுத்தவும் வழிவகுத்து விடுகின்றன.
இதனுடைய தொடர்ச்சியாக போட்டி முறையில் அமைந்துள்ள கல்வி முறையில் சேர்ந்து கற்பதற்கோ அல்லது சேர்ந்து இயங்குவதற்கோ வாய்ப்புகள் இருப்பதில்லை மாறாக தனித்தனியனாக இயங்குவதற்கான சூழல்களே உருவாக்கப்பட்டு விடுகின்றன. இந்நிலையில் முன்பு சொன்னது போல கூத்தரங்கில் சிறுவர்கள் செவிவழியேறலாக கேட்டு பாடவும் சேர்ந்து கற்கவுமான வாய்ப்புகள் இருந்துவருகின்றன. எனினும் நவீன அறிவுப்பரப்பில் அத்தகைய ஆளுமைகளை உருவாக்குகின்ற ஆளுமையாளர்களை பாமரர்களாக கட்டமைக்கின்ற போக்கே இருந்து வருகின்றது. மறுபுறம் எங்களுடைய பாடத்திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளவை எங்களுடைய அறிவையும் திறனையும் பொருளற்றதாக்கி விட்டிருக்கின்றது. சுருங்கச் சொன்னால் ஐரோப்பிய உலகம் தெரிந்த உள்ளுர் உலகங்கள் தெரியாதவர்களாக வடிவமைப்படுகின்றோம் என்பதுதான்.
இந்நிலையில் முற்போக்கான சமூக உருவாக்கம் குறித்து சிந்திக்கின்ற போது மிகச்சிறப்பாக சிறுவர்கள் கேட்டதை பேசும் பழக்கமுடையவர்களாக இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆக அத்தகைய சிறுவர்கள் மத்தியில் முற்போக்கான, ஆக்கப்பூர்வமான மற்றும் சமத்துவமான சிந்தனையை வளர்விக்கும் நோக்கில் அவர்களே கேட்டு பாடும் வகையிலான செயல்வாத பாடல்களும் அவர்களே கதைச் சொல்லும் வகையிலும் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படவிருக்கின்றது.
சுயாதீனமான சமூகங்களின் உருவாக்கத்திற்கும், சமத்துவமான வாழ்தலை நோக்கிய பயணத்திற்கும் அவரவர் அறிவும், படைப்பாக்கத்திறனும், விமர்சன நோக்கும் அடிப்படையாக அமைகின்றன என்றவகையில், மனித நினைவாற்றலை பொருளுடையதாக்கி, சேர்ந்து கற்பதற்கான சூழலை மீளவும் உருவாக்கும் நோக்கில் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படவிருக்கின்றது.
சி.ஜெயசங்கர்
இரா.சுலக்ஷனா