ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடல் ஒஸ்கர் விருதினை வென்றுள்ளது. இந்திய நேரப்படி திங்கள் கிழமை காலையில் லொஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 95வது அகாடெமி விருதுகளில் அசல் பாடல் பிரிவில் இந்தப் பாடல் ஒஸ்கர் விருதினை வென்றுள்ளது.
ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியுள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் தங்கள் குரல் மூலம் இந்தப் பாடலுக்கு வேகம் சேர்த்துள்ளனர்.
நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் பிரேம் ரக்ஷித்தின் நடன அமைப்பில் தேஜாவின் மெட்டுகளால் பாடலை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுகளில் அசல் பாடல் பிரிவில் நான்கு பாடல்கள் பரிந்துரைக்கப்பட்ட அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற மூன்று பாடல்களுடன் கடும் போட்டி போட்டு ‘நாட்டுக்கூத்து’ விருதைப் பெற்றது.
‘நாட்டுக்கூத்து’ பாடல் ஏற்கெனவே பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி சிறந்த அசல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றதுடன் விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை ஆர்ஆர்ஆர் படைத்தது.
அத்துடன் ‘சிறந்த பாடல்’ பிரிவில் விமர்சகர்களின் சாய்ஸ் விருது ஒன்லைன் பிலிம் கிரிட்டிக்ஸ் சொசைட்டி விருது, ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கத்தின் சிறந்த அசல் பாடல் மற்றும் ஹூஸ்டன் திரைப்பட விமர்சகர்கள் விருதுகள் ஆகியவற்றினையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படமும் ஒஸ்கர் விருதினை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது