சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி, குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்த வவுனியாவைச் சேர்ந்த பொன்னையா மாணிக்கவாசகம், நள்ளிரவு (12.04.23) 12.40 மணி அளவில் மரணமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் குறித்து பல சவால்களுக்கு மத்தியில் செய்தி சேகரித்து மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை சர்வதேசமெங்கும் வெளிப்படுத்தியவர்.
அன்றைய நாட்களில் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் தமிழோசையில் குறிப்பாக இலங்கை செய்திகளில் வடமாகாண செய்தியாளர் மாணிக்கவாசகத்தின் செய்திகளையும் பெட்டகங்கபிரதான இடத்தை பிடித்திருந்தன.
கடந்த 01.04.2023 அன்று தனது 76 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடியவர், அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.04.2023 வியாழனன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னார் யுத்த காலத்திலும், அதன் பிற்பாடும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கட்டுரையாளராகவும், செய்தியாளராகவும் பணிபுரிந்திருந்தார். அன்னாரின் இழப்பின் துயரில் குளோபல் தமிழ்ச் செய்திகளும் இணைந்து கொள்கிறது.