போலி நாணய தாள்களுடன் கைதான யாழ்.பல்கலைக்கழக மாணவனுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் போலி நாணய தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் கைதாகியுள்ளார்.
கடந்த வாரம் கிளிநொச்சி பகுதியில் 13 இலட்ச ரூபாய் போலி நாணய தாள்களுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களுடன் தொடர்பினை பேணிய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் காவற்துறையினர் அடையாளம் கண்டு அவரை பின் தொடர்ந்து வந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு குறித்த நபர், யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பொதி ஒன்றினை எடுத்து செல்வதனை காவற்துறையினர் அறிந்து அவரை சோதனையிட்டனர்.
அதன் போது பொதியினுள் போலி நாணய தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கும் மின்னியல் அச்சு இயந்திரத்தை (பிரிண்டர்) மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து சந்தேகநபரை கைது செய்த காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து மன்று சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.