592
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தி , குடும்பம் ஒன்றை படுகொலை செய்ய ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கூலிப்படை ஒன்றினை கூலிக்கு அமர்த்திய டென்மார்க்கில் உள்ள பிராதான சந்தேக நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
கல்வியங்காடு பிரதேசத்தில் கடந்த 15ஆம் திகதி அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு காவல்துறையினா் கைது செய்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்துடன் 6 பேர் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன் ஒருவர் தாக்குதல் சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதுடன் ஒருவர் தரகராகவும் செயற்பட்டுள்ளார் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வன்முறை கும்பலிடம் இருந்து பெண்களின் ஆடைகள்,மோட்டார் சைக்கிள்கள்,வாள்கள்,கோடாரி,இரு ம்பு கம்பி,மடத்தல் போன்றன கைப்பற்றபட்டுள்ளன. டென்மார்க்கில் வசித்து வரும் விஸ்வநாதன் என்ற நபர் பணம் அனுப்பியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் அரச உத்தியோகத்தரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் டென்மார்க்கில் இருந்து விஸ்வநாதன் என்பவரால் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்குந்தா இந்து கல்லூரி விளையாட்டு மைதானம் தொடர்பில் நீடித்த பிரச்சனையே குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் எனவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Spread the love