இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார். 47 வயதான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.
பிரபு தேவா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ராசய்யா’ திரைப்படத்தில் மூலம் பாடகியாக அறிமுகமான பவதாரிணி பல படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ரு, மை பிரெண்ட்’ திரைப்படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பவதாரிணி கடைசியாக ‘அனேகன்’ திரைப்படத்தில் ‘ஆத்தாடி ஆத்தாடி’ பாடலைப் பாடியிருந்தார். அதேபோல இசையமைப்பாளராக இவர் பணியாற்றிய கடைசி படம் ‘மாயநதி’.
அவரது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் அதிகமாகப் பாடியுள்ள பவதாரிணி அவரது தந்தை இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தின் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலைப் பாடி அதற்காக 2001-ம் ஆண்டுக்கான தேசிய விருதையும் பெற்றார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி அதற்காக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.