இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியது அமைச்சரவையின் கூட்டுக் கருத்தா என வினவிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்தியாவின் ஒரு பகுதியாகவே இவர் செயற்படுகின்றார் என நாடாளுமன்றத்தில் இன்று (20.02.24) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த விமல் வீரவன்ச இல்லையேல் இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா அல்லது தனது தனிப்பட்ட கருத்தா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தொடர்பில் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க என்ன உரிமை அவருக்கு (ஹரின்) உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார:
கதையை முழுவதுமாகப் பார்த்தால் என்ன சொல்லப்பட்டது என்பது புரியும். இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவைக் காட்ட இந்தியாவை இலங்கைக்கு அழைத்துள்ளார். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், சமூக ஊடகங்களில் இருந்து வார்த்தைகள் சேர்க்கப்பட்டு திரித்து வெளியிடப்பட்டுள்ளன. முழுக்கதையையும் கேட்டால் பிரச்னையை சரி செய்துவிடலாம் என்றார். அத்துடன் இந்த விடயம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விஷயமல்ல என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மீண்டும் எழுந்த விமல் வீரவன்ச, அப்படியானால், ஏதாவது ஊடக அறிக்கையை வெளியிட்டிருக்கவேண்டும். இல்லையேல் தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.