ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை தமது கட்சி இன்னும் நம்புவதாகவும் ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மாறுபட்ட நிலைப்பாடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் நாடாமன்றக் குழுவில் உரையாற்றிய பசில் முன்னதாக அவர் ஜனாதிபதியை சந்தித்து சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதை நினைவூட்டினார்.
SLPP இன் கூற்றுப்படி, அரசியலமைப்பின் அடிப்படையில் இந்த ஆண்டு ஒக்டோபரில் திட்டமிடப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உடன்பட்டு கணிசமானளவு எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த பாராளுமன்றத் தேர்தல் 2025ஆம் ஆண்டிலேயே நடைபெற உள்ளது. எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து, விரைவான தேர்தலை அறிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்தத் தேர்தலையும் சந்திக்க வேண்டும் என பசில் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலில் வரக்கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகும் வகையில் அரசியல் பணிகளை தொடங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கும் SLPP நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஜனாதிபதியுடன் தனது நிலைப்பாடு தொடர்பாக எந்தவிதமான முரண்பாடுகளுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ராஜபக்ச முன்னதாக ஊடகங்களுக்குத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.