கிழக்கிலங்கையின் குறிப்பாக மட்டக்களப்பின் பழங்குடி மக்களைச் சாராத தமிழ்ப் பண்பாடுகளில் மாரியம்மன் சடங்கு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகக் காணப்படுகின்றது.
மட்டக்களப்புத் தமிழ்ப் பண்பாடுகளின் தனித்துவங்களை விளங்கிக் கொள்வதற்கு மாரியம்மன் சடங்குப் பண்பாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.
மாரியம்மன் சடங்குப் பண்பாட்டைப் பற்றிய கவனிப்பு அற்ற பார்வை மட்டக்களப்பின் பண்பாட்டைச் சரியாக விளங்கிக் கொள்ளாத அரைகுறைப் பார்வையென்றே கூறலாம்
ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்று மட்டக்களப்பின் பண்பாடுகளில் கண்ணகியம்மன் சடங்கும் மாரியம்மன் சடங்கும் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றன.
வைகாசி எப்படிக் கண்ணகிக்கு முக்கியமோ அதுபோல ஆனிப் பூரணை மட்டக்களப்பில் மாரியம்மனுக்குரியதாகச் சிறப்புற்று வருகிறது.
மிகப்பெரும்பாலும் மட்டக்களப்பில் உள்ள ஊர்கள் அனைத்திலும் மாரியம்மன் சடங்கு வருடாந்தம் நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பில் ஆனி மாதத்தில் பூரணையினை நிறைவு நாளாகக் கொண்டு ஊர்கள் தோறும் மாரியம்மன் சடங்கு நடைபெற்று வருவதனைக் காணலாம்.
மாரியம்மன் சடங்கில் ஏழு கன்னிமாருக்காக நடத்தப்படும் சர்க்கரையமுதுச் சடங்கு மிகவும் முக்கியமானது. கண்ணகிக்கு குளிர்த்தி எவ்வளவு முக்கியமோ அதுபோல மாரியம்மன் சடங்கில் கன்னிமாருக்கான பள்ளயம் மிக மிக முக்கியம்.
தொன்மைமிகு தமிழ்க்குடியின் ஆதித்தாய்மார்களை வரவழைத்து அவர்களைத் திருப்தியுறச் செய்து அவர்களிடமிருந்து இவ்வுலக வாழ்வை வாழ்வதற்கான ஆசிகளையும் சக்திகளையும் பெற்றுக்கொள்ளும் புராதன பழங்குடி மரபின் தொடர்ச்சியாக இக்கன்னிமார் சடங்கு விளங்குவதாகக் கருதப்படுகின்றது.
மட்டக்களப்பில் மாரியம்மனுக்கான சடங்கை ஒவ்வொரு சமூகத்தவரும் ஊரவரும் தத்தமது வரலாறு பண்பாடு என்பவற்றிற்கேற்ப சிறு சிறு வித்தியாசங்களுடன் தனித்துவமாகவும் அதேநேரம் மாரியம்மன் பத்ததி எனும் பொது விதிகளுக்குட்பட்டும் வடிவமைத்து முன்னெடுத்து வருவதனை உய்த்தறிய முடிகிறது.
மேற்கைரோப்பியரின் காலனித்துவக் காலத்தில் உள்ளுர்க் கோவில்களில் சமூகத்தவரும் ஊரவரும் ஒன்றுகூடி மாரியம்மனுக்குச் சடங்கு செய்ய முடியாத நிலைமை உருவான போது ஊர்களில் சிலருடைய வீடுகளில் இரகசியமாக மாரியம்மனுக்கும் கன்னிமாருக்கும் சடங்கு செய்து மட்டக்களப்பார் மாரியம்மன் சடங்கைத் தற்காத்து வந்துள்ளார்கள். இதன் தொடர்ச்சி இன்றும் ஆங்காங்கே சில வீடுகளில் நடந்தேறி வருகின்றது.
வைகாசியில் நடைபெறும் கண்ணகியம்மன் சடங்கிற்குள்ளும் மாரியம்மன் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம். உதாரணமாக மட்டக்களப்பின் கோராவெளி, மட்டுநகரையண்டிய கண்ணகி கோவில்களில் நடைபெறும் சடங்குகளை உற்று நோக்கும் போது இதனை அவதானிக்க முடிகின்றது. அதாவது கலையேறித் தெய்வமாடிச் சடங்கு நடைபெறும் கண்ணகி வழிபாட்டில் மாரியம்மன் மிகுந்த முக்கியத்துவமுடையவராக விளங்கி வருகிறார்.
இதேபோல் ஆண்தெய்வங்களின் பெயரில் உள்ள மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குக் கோவில்களிலும் சடங்கின் ஆதார சக்தியாக மாரியே காணப்படுகிறார். வளத்தின் தெய்வமான மாரியம்மன் இல்லாமல் மட்டக்களப்பின் பத்ததிச் சடங்கே இல்லை என்று கூறலாம். மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகளை ஆழமாக அவதானிக்கும் போது இவற்றினை விளங்கிக்கொள்ள முடிகின்றது.
மட்டக்களப்பின் பத்ததிச் சடங்குகளையும் அவற்றின் பண்பாடுகளையும் நாடக ஆற்றுகைக் கோட்பாடுகளின் புரிதலுடன் மட்டும் நின்று கொண்டு உற்று நோக்காமல் வரலாறு, பண்பாடு, நம்பிக்கை, மரபுரிமைகள், சூழலியல், மனித உளவியல், பால்நிலை, நிறுவன சமயங்களின் தாக்கம், காலனியநீக்கம் என்ற இன்னோரன்ன பல்வேறு கோட்பாடுகள், சிந்தனைகள் முதலானவற்றின் புரிந்து கொள்ளலுடன் தொடர்ச்சியாக அவதானிக்கும் போதும், சடங்குகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தாமல் அவற்றுடன் நெருக்கமான ஊடாட்டத்தினை மேற்கொண்டவாறு தொடர்ச்சியாக இயங்கி அனுபவங்களைப் பெறுவதன் மூலமாகவும் பத்ததிச் சடங்குகளைப் பற்றிப் பல்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்ளவும் அதற்றின் நிறை குறைகளைக் காணவும் முடியும்.
இதனூடாக சமகாலத்தின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் சடங்குகளைத் தகவமைப்பதற்குமான ஆய்வறிவு அனுபவங்கள் நமக்கு வாய்க்கப்பெறும்.
து.கௌரீஸ்வரன்,
20.05.2024.