288
மட்டக்களப்பின் சமூகப் பண்பாட்டுக் கட்டுருவாக்கத்தில் கன்னன்குடா எனும் புராதன ஊரின் வகிபாகம் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
அதாவது மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தில் வாழும் சமூகங்களின் கட்டுருவாக்கத்தின் மையமாகக் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றிசுவரர் கோயில் விளங்கி வருகிறது. இக்கோவிலின் பரிபாலனத்தில் கன்னன்குடாவில் வாழுவோரும் மரபுவழி உரித்துடைமையுடன் முக்கிய பங்காற்றி வருகின்றார்கள்.
தமிழர்தம் வரலாற்றில் பேரரசுகள் உருவாகி அதற்குத் தகுந்தவாறு சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளும் பொறிமுறைமைகளும் உருவாக்கப்பட்ட கால கட்டங்களில் கோவில்களை மையப்படுத்தியே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
இந்தவகையில் கிழக்கிலங்கையின் வரலாற்றில் தேசத்துக் கோயில்களை மையமாகக் கொண்டு சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பின்புலத்தில் படுவான்கரை எனும் பரந்த நிலப்பகுதியின் பண்பாட்டின் மையமாகிய தான்தோன்றீசுவரர் கோயிலின் உரித்துடைமையுள்ள நிருவாகிகளின் ஒரு பகுதியினர் வாழும் ஊர்களுள் ஒன்றாகக் கன்னன்குடா விளங்குவதால் கிழக்கிலங்கையின் பண்டைய சமூகப் பண்பாட்டு உருவாக்கத்துடன் தொடர்புடைய பழம்பெரும் ஊராகக் கன்னன்குடா அதன் வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இத்தோடு, காலனித்துவக் காலத்தில் மட்டக்களப்பின் நவீன நிருவாக மையமாகப் புலியன்தீவு உருவாகிய போது புலியன்தீவுக்கு மிகவும் அருகில் உள்ள படுவான்கரையின் நுழைவாயிலாகக் கன்னன்குடா விளங்கியுள்ளது.
இதனால் காலனித்துவக் காலத்திலும் கன்னன்குடாவின் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை படுவான்கரையின் வளங்களையும், செல்வங்களையும் நகருக்குப் பரிமாற்றஞ் செய்வதற்கும் நகரிலிருந்து வரும் எழுவான்கரையின் வளங்களையும், செல்வங்களையும் மற்றும் வெளிநாட்டுப் பொருள்களையும் படுவான்கரைக்குப் பரிமாற்றஞ் செய்வதற்குமான வாவிக்கரையினை அண்டிய கேந்திர முக்கியத்துவமுடைய படுவான்கரையின் பழம்பெரும் ஊராகக் கன்னன்குடா திகழ்ந்துள்ளது.
வலையிறவுப் பாலம் அமைக்கப்படும் வரை படுவான்கரைக்கும் மட்டுநகருக்குமான நீர்வழிப்போக்குவரத்து கன்னன்குடா திமிலைதீவுத் துறைகளினூடாகவே நடைபெற்று வந்துள்ளது.
இதனால் மரபுவழிப்பட்ட உள்ளுர் அறிவு முறைமைகளுடன் நவீன அறிவு முறைமைகளையும் உள்வாங்கிக்கொண்ட ஊராகக் கன்னன்குடா மட்டக்களப்பில் முக்கியத்துவம் பெற்றது.
கன்னன்குடாவின் சமூகப் பண்பாட்டு இயக்கத்தின் மையமாக அங்குள்ள கண்ணகியம்மன் கோவில் விளங்கி வருகின்றது. வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள பல்வேறு ஊர்களுக்கான தாய் ஊராகவும் கன்னன்குடா உள்ளது.
கன்னன்குடாவின் பொருளாதாரப் பலமாக இவ்வூரின் போடிமார்களின் நெல்லுப் பட்டறைகளில் மிகுந்திருந்த பல்வேறு விதை நெல்லினங்களும் மற்றும் கால்நடைகளும் விளங்கியிருந்தன.படுவான்கரையின் பரந்த வயல் வெளிகளில் பயிரிடுவதற்கான உள்ளுர் விதை நெல் வகைகளும், நிலத்திற்கு வளமூட்டி நிலத்தைப் பண்படுத்தும் வலுவான உள்ளுர்க் கால்நடைகளும் (எருமை,பசு) கன்னன்குடாவில் தன்னிறைவு பெற்றிருந்தன.
இவற்றைப் பிரயோகிப்பதில் சிறப்புத் தேர்ச்சியும் நிபுணத்துவமுங் கொண்ட விவசாயிகளும், உள்ளுர் வைத்தியர்களும் இவ்வூரின் வளமாக வாழ்ந்தார்கள்.இதனால் நவீன விவசாயமும், நவீன நெல்லினங்களும் அறிமுகமாகுவதற்கு முன்னரான காலம் வரை மட்டக்களப்பின் உணவு உற்பத்திக்கான உத்தரவாதத்தை வழங்கவல்ல பொருளாதார வலுக்கொண்ட ஊராகக் கன்னன்குடா முக்கிய பங்காற்றி வந்துள்ளது.
புலியன்தீவு, கோட்டைமுனை, அமிர்தகளி, ஊரணி, கொக்குவில், கல்லடி, காத்தான்குடி முதலான எழுவான்கரையின் பழைமையான ஊரவர்களுக்கும் கன்னன்குடாவில் வாழும் மக்களுக்குமான தொடர்பாடல் கன்னன்குடாவில் தன்னிறைவு பெற்றிருந்த நெல் வளத்தையும் கால்நடைகளின் விளை பொருட்களையும் (பால், தயிர், நெய்) அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
கன்னன்குடாவின் ஒவ்வொரு வீடுகளிலும் நிறைந்துள்ள நெல்மணிகளும், பாலுந் தயிரும் அவ்வூரிற்கேயுரிய விருந்தோம்பல் பண்பாட்டை உருவாக்கியுள்ளன.
கன்னன்குடாக் கண்ணகியம்மன் சடங்கு விழாவும், ஊரின் கூத்து அரங்கேற்ற விழாக்களும் விருந்தோம்பலுடன் இணைந்ததாகவே இன்றுவரை இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு பல சிறப்புகளையுடைய கன்னன்குடாவில் உள்ளுர்க் கலை மரபுகளில் சிறப்புத் தேர்ச்சி மிக்க கலைஞர்கள் நிரம்பியுள்ளார்கள்.
கன்னன்குடாவிற்கேயுரிய புலவர் மரபும் தொடர்ந்து வருகிறது. இவ்வூரின் புகழ்பெற்ற புலவராக வாழ்ந்து பல கூத்துகளை கலைமாமணி மா.சிதம்பரப்பிள்ளை அவர்கள் பாடியுள்ளமை பற்றி அறிகிறோம். இப்புலவர் பாரம்பரியத்தில் தற்போது கி.அருளம்பலம் புலவர் அவர்கள் பலகூத்துகளை எழுதி வருவதைக் காண்கிறோம்.
குறிப்பாகத் தென்மோடி, வடமோடி, வசந்தன் முதலான கூத்துகளையும், தோரணம் முதலிய சமுதாயப் பங்குபற்றல் கைவினைக் கலைகளையும் செய்வதில் வல்லமையுள்ள கலைஞர்கள் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.
கிழக்கில் தென்மோடி, வடமோடிக் கூத்துக்கலை மரபினைப் பரவலாக்கிய முதுபெரும் அண்ணாவியாராகக் கண்டறியப்பட்டுள்ள சீனித்தம்பி என்பவரிடம் கூத்தினை முழுமையாகக் கற்றுத் தேர்ந்த மட்டக்களப்புக் கூத்து மரபின் முக்கியமான ஆளுமைகளான மறைந்த நாகமணிப்போடி அண்ணாவியாரும் அவருடைய சகோதரரான நோஞ்சிப்போடி அண்ணாவியாரும் நவீன காலத்திலும் கன்னன்குடாவினுடைய செழுமையான கூத்து மரபினை வளர்த்தெடுத்த முதுசொம்களாவர்.
இடர்மிகுந்த போர்க் காலத்திலும் கன்னன்குடாவின் கூத்துமரபினைத் தற்காத்து வளர்த்தெடுத்த அண்ணாவியாராக அமரர் பாலகப்போடி அவர்கள் செயலாற்றியிருந்தார்.
கன்னன்குடாவின் கூத்துப் பண்பாட்டைத் தொடர்;ச்சியாக இயங்கச் செய்வதில் அவ்வூரின் மையமாகத் திகழும் கண்ணகியம்மனின் வருடாந்தச் சடங்கு விழா காத்திரமான பங்களிப்பை நல்கி வருவதனை நாம் கண்டு வருகிறோம். கன்னன்குடாவைப் பொறுத்தமட்டில் கண்ணகியம்மனுக்கான விழா என்பது மட்டக்களப்பு வடமோடி, தென்மோடிக் கூத்து ஆற்றுகைகளுடன் கூடிய தனித்துவமான விழாவாகவே நடைபெற்று வருகிறது எனலாம்.
இத்தோடு கன்னன்குடாவின் கூத்து மரபினை வளர்த்த குறிப்பிடத்தக்க அண்ணாவிமார்களாக திரு பரமக்குட்டி, இயற்கையடைந்த குருகுலன் முதலியோரும் செயலாற்றியுள்ளனர். இன்றைய சூழலில் மட்டக்களப்பின் வடமோடி தென்மோடிக் கூத்து மரபில் இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணாவிமார்களான கதிர்காமநாதன், பசுபதிப்பிள்ளை, சண்முகநாதன், ரெட்ணசிங்கம் முதலியோர் கன்னன்குடாக் கூத்து மரபின் வழி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தோடு வருங்காலத்தில் அண்ணாவிமார்களாகச் சிறப்புத் தேர்ச்சி பெறத்தக்க இளம் கூத்தர்கள் பலர் கன்னன்குடாவின் கூத்தரங்கில் மத்தளம் வாசிப்பதைக் காண முடிகிறது.இன்றைய நுகர்வுப் பண்பாட்டு நிலைமைகளுக்கும் இலத்திரனியல் தொடர்பாடல் வளர்ச்சிகளுக்கும் மத்தியில் பல தலைமுறைகளைச் சேர்ந்த அண்ணாவிமார்களையும், சிறப்புத் தேர்ச்சி மிக்க கூத்துக் கலைஞர்களையும் கன்னன்குடாவில் காண்பது கவனத்திற்கும் கற்றலுக்கும் உரியதாகியுள்ளது.
குறிப்பாக இளமாணி, முதுமாணி என்று நவீன கல்வியில் தேறிய பட்டதாரிகளான இளம் கூத்தர்களைக் கன்னன்குடாவில் கணிசமாகக் காணலாம்.
அதிபர், ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை உத்தியோகத்தர் என அரச சேவையிலுள்ள பலரும் சிறந்த கூத்தர்களாக இங்கு கலைப்பணியாற்றி வருகிறார்கள்.
பட்டதாரிகளான இக்கூத்தர்களில் சிலர் கலைப் பண்பாட்டு ஆய்வாளர்களாகவும் மேற்கிளம்பி வருகிறார்கள்.
இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையினால் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பங்குபற்றலுடனான கலைப் பண்பாட்டு நடவடிக்கைகளில் கன்னன்குடாக் கூத்துக் கலைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. எடுத்துக்காட்டாகக் களரியமைத்தல், தோரணம் உருவாக்கல், தென்மோடி, வடமோடி முதலான பயிற்சிகளுக்குரிய வளவாளர்களாகக் கன்னன்குடாவின் கலைஞர்கள் பங்களித்துள்ளார்கள்.
இத்தோடு மட்டக்களப்பில் மூன்றாவதுகண் நண்பர்கள் குழு முன்னெடுத்துவரும் கூத்து மீளுருவாக்கத்திற்கான செயற்பாடுகளில் கன்னன்குடாவின் அண்ணாவியாரான சி.பாலகப்போடி அவர்கள் முக்கிய பங்களிப்புகளை வழங்கியிருந்தார். குறிப்பாக வடமோடிக் கூத்தின் கட்டமைப்பு மற்றும் பறையறைவோன் பாத்திரத்தின் மீளுருவாக்கம் என்பவற்றிற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், வழிப்படுத்தல்களையும் வழங்கியிருந்தார்.
2003 ஆம் வருடம் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய அனைத்துலகச் சமூதாய அரங்க மாநாட்டில் ஒருநாள் நிகழ்ச்சி கன்னன்குடாவில் நடைபெற்றிருந்தது. இதில் கண்காட்சி, கூத்தாற்றுகை என்பன இடம்பெற்றிருந்தன. மரபுவழி விவசாயத்தை மேற்கொள்ளும் பொறிமுறைகள் தொடர்பாகக் கன்னன்குடாவின் ஆளுமைகளினால் செய்யப்பட்ட கண்காட்சியும் அதுதொடர்பிலான அவர்களின் விளக்கங்களும் இம்மாநாட்டில் பங்குபற்றிய ஆய்வறிவாளர்களின் கற்றலுக்கும், கவனத்திற்கும் உரியவையாகியிருந்தன.
இக்கண்காட்சியானது அமரர் சி.பாலகப்போடி அவர்களது இடத்தில் நடைபெற்றிருந்தது. இது படுவான்கரையினுடைய உள்ளுர் அறிவு முறைகளை எடுத்தியம்பவல்ல நூதனசாலை ஒன்றைத் தரிசித்த அனுபவத்தை அதனைப்பார்வையிட்ட பலருக்கும் வழங்கியிருந்தது.
இவ்வாறு மட்டக்களப்பின் சமூக பண்பாட்டு வரலாற்றில் முக்கியம் பெற்றுள்ள கன்னன்குடாவில் கண்ணகி முத்தமிழ் மன்றம் தயாரித்து வழங்கும் ‘சூரிய புத்திரன்’ எனும் வடமோடிக் கூத்தின் அரங்கேற்ற விழா எதிர்வரும் 15.06.2024 ஆந் திகதி சனிக்கிழமை மாலை 06 மணியளவில் கன்னன்குடா காயான்குள வயல் வெளியில், அண்ணாவியார் சி.பாலகப்போடி அவர்களின் நினைவாக நான்கு பக்கமும் நான்கு தோரணங்கள் பொருத்தப்பட்டு அமைக்கப்படவுள்ள களரியில் கோலாகலமான முறையில் நடைபெறவுள்ளது.
இக்கூத்தில் பங்குபற்றும் அனைத்து கலைஞர்களையும் இதற்கு உறுதுணையாக உள்ள ஊர் மக்களையும் பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!
கொண்டாடி மகிழ்வோம்!
து.கௌரீஸ்வரன்,
12.06.2024
Spread the love