பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக, பதுளை மாவட்டப் பிரதேச செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார். ஹப்புத்தளைப் பகுதியில், நேற்றிரவு வீடொன்றின் சமயலறையில் கற்பாறை சரிந்து விழுந்ததால், அவ்வீட்டில் வசித்து வந்த பெண்ணும் அவரது இரண்டு புதல்வர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் ஆபத்தானக் கட்டத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளெனமோர் தோட்டத்தைச் சேர்ந்த 43 குடும்பங்களும் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்தப் பிரதேசத்தில், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், வீடுகளின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் நிலம் தாழிறங்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.