யாழ்ப்பாணத்தில் புகையிலையை கொள்வனவு செய்து 05 கோடி ரூபாய் பணத்தினை வழங்காது மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினா் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதிகளில் புகையிலை செய்கையாளர்கள் 14 பேரிடம், சுமார் 05 கோடி ரூபாய் பெறுமதியான புகையிலைகளை கொள்வனவு செய்த பின்னர் , நீண்ட காலமாக பணத்தினை வழங்காது ஏமாற்றி வந்துள்ளார்.
அந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரிடம் முறைப்பாட்டு செய்தனர். 14 பேரிடமும் தனித்தனியாக முறைப்பாடுகளை பெற்று, விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அவர் தலைமறைவாகி இருந்தார்.
அந்நிலையில் குறித்த நபர் வவுனியா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , அங்கு விரைந்த காவல்துறையினா் சந்தேகநபரை கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு உட்படுத்தியகாவல்துறையினா் , சந்தேக நபரை நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்கவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த மன்று எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.