106
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் முறையிட சென்ற போதிலும் காவல்துறையினர் அவரின் முறைப்பாட்டினை பெற்றுக்கொள்ளாது அலைக்கழித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காரைநகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஒருவர் , தன்னை வங்கி ஒன்றின் மானிப்பாய் கிளையில் இருந்து கதைப்பதாக அறிமுகம் செய்து கொண்டு , உங்கள் வங்கி கணக்கு செயலிழந்து விட்டது, அதனை மீள செயற்படுத்த , அடையாள அட்டை இலக்கத்தை கூறுமாறு கேட்டுள்ளார். அதனால் அவரும் அடையாள அட்டை இலக்கத்தை கூறியுள்ளார். சில மணி நேரத்தில் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தவர்கள் , கணவரின் வங்கி கணக்கு இலக்கத்தை கூறுமாறு கோரியுள்ளனர். அவரும் வங்கி கணக்கு இலக்கத்தை கூறியுள்ளார்.
அதன் பின்னர் , அவரது கணக்கில் இருந்து 05 தடவைகள் 40 ஆயிரம் ரூபாயும் , அதன் பின்னர் 20 ஆயிரம் ரூபாய் , 06 ஆயிரம் ரூபாய் என 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறப்பட்டுள்ளது. னது கணக்கு இலக்கத்தில் இருந்து பணம் பெறப்பட்டமை தொடர்ப்பில் தொலைபே சிக்கு குறுந்தகவல் வந்ததை அடுத்து , வங்கிக்கு நேரில் சென்று வங்கி முகாமையாளரிடம் கேட்ட போது , காவல்துறையிடம் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார் .
வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால் , யாழ்ப்பாண தலைமையக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது , அதனை உங்கள் பிரிவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர்.
அதனால் அவர் ஊர்காவற்துறை காவல் நிலையம் சென்ற போது , வங்கி மானிப்பாய் பகுதி என்பதால் , மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர். மானிப்பாய் காவல் நிலையம் சென்ற போது , வங்கி கிளை அமைந்துள்ள பகுதி வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்குள் வருகிறது. வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுங்கள் என கூறியுள்ளனர்
வட்டுக்கோட்டை காவல்நிலையம் சென்ற போது , முறைப்பாட்டை எழுத தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் இல்லை. பிறகு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். காவல் நிலையத்தில் முறைப்படு செய்வதற்காக பாதிக் கப்பட்டவர் சுமார் 150 கிலோ மீற்றர் தூரத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டும் முறைப்பா ட்டை எந்த காவல் நிலையமும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
Spread the love