வடக்கு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறே கோருகின்றனர். இந்த தெளிவு படுத்தலை தென்னிலங்கை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இதனையே என்னை சந்திக்கும் தென்னிலங்கை சிவில் சமூக குழுக்களிடமும் கூறி வருகிறேன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் இன்றைய தினம் புதன்கிழமை வயாவியானில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம்.
இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் மற்றும் பூனையன்காடு இந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.