யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர், ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இங்குள்ள முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது ஆளுநரிடம் குறிப்பிட்டதுடன் முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் வினவினார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பிலும், விமான சேவை மற்றும் கப்பல் சேவைகள் தொடர்பாகவும் பிரிட்டன் தூதுவர் கேட்டறிந்துகொண்டார்.
காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி அகழ்வு என்பன தொடர்பாகவும் பிரிட்டன் தூதுவர் களநிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த காலங்களில் பிரிட்டன் அரசாங்கம் ஐ.நா.வின் முகவர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு நிதி உதவிகளை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், தற்போதும் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப எதிர்பார்த்துள்ள அகதிகளுக்கான வாழ்வாதாரத்துக்கு உதவிகள் தேவை என்ற கோரிக்கையையும் ஆளுநர் முன்வைத்தார்.
மேலும், பிரதான வீதிகள் புனரமைக்கப்பட்டிருந்தாலும் கிராமிய வீதிகள், கிராமிய உட்கட்டுமானங்களுக்கான தேவைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான தேவைப்பாடுகள் இன்னமும் உள்ளன எனவும் ஆளுநர் பிரிட்டன் தூதுவருக்கு தெரியப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

