1980 களில் ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைய ஆரம்பித்ததில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் இலங்கையில் இரண்டு சிறுபான்மையினங்கள் படுகொலைகளை எதிர் கொண்டன. பெரும்பான்மையினமும் படுகொலைகளை எதிர்கொண்டது. 2009 ம் ஆண்டு வைகாசி மாதத்துடன் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டது. 2009 ம் ஆண்டு வைகாசி மாதத்தில் பெரும் சமர்க்களத்தில் ஆயுதம் தாங்கிய தமிழர்களும் ஆயுதம் தாங்காத தமிழர்களும் ஆயுதத்தைக் கைவிட்ட தமிழர்களும் ஆயிரக்கணக்கிற் கொல்லப்பட்டனர். இக்கொலைகள் இனப்படுகொலைகளா? இல்லையா? என்கிற வாதம் இன்றைக்கு மேலெழுந்தது நிற்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான வரைவிலக்கணங்களை அடிப்படையாகக்கொண்டு இது தொடர்பாகப் பல்வேறு வியாக்கியானங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உலகத்தில் வழக்கில் உள்ள சட்டங்களும் குற்றவியல் வரைவிலக்கணங்களும் சனநாயக உணர்வு கொண்ட மானுட ஆன்மாவின் நியாயாதிக்கத்தைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டவை அல்ல. அவை வல்லமையுள்ளவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாக்கும் வகையில் வளையக்கூடியவை. அதிகாரமுள்ளவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தப்பிச் செல்ல வாசல்களைக் கொண்டவை. கொலை செய்பவர்களைக் குற்றமற்றவர்கள் எனவும் கொலைகள் எதுவும் செய்யாதவர்களைக் கொலையாளிகள் எனவும் வாதிடவும் அதில்வெற்றிபெறவும் கூடியவர்கள் நிரம்பிய கட்டமைப்புக்களின் ஊடாக ஈழத்தில் நிகழந்த கொலைகளைப்பார்க்க நீங்கள் விரும்பினால் அங்கு நிகழக்கூடிய நியாயமற்ற, வாதங்கள் மற்றும் பிரதி வாதங்கள் என்னும் சகதிக்குள் விழுந்து விடுவீர்கள். இவ்வமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்து நிகழந்த கொலைகளுக்கு உரிய பெயர் சூட்டலும் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என்று நம்புவீர்களாக இருந்தால் உங்களுக்கு உலகத்தில் வல்லமையுள்ளவர்கள் தொழிற்படும் முறைமை பற்றி உங்களுக்குத் தெளிவில்லை என்றே அர்த்தம்.
உலகவரலாற்றில் நிகழ்ந்த நிகழ்ந்து வருகின்ற சிறிதும் பெரிதுமான பல கொலைகள் அடிப்படையிற் சிறுபான்மை இனங்களை அழித்து விடுவதையே நேரிடையானதும் மறைமுகமானதுமான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
இவை தொடர்பாக அரசாங்கங்களும் போராளி அமைப்புகளும் அவற்றின் பேச்சாளர்களும் அவ்வவ் வட்டங்களுக்குள் இயங்கும் அரசியல்வாதிகளும் சொல்பவற்றைக் கூறித்து நாங்கள் கொள்ளும் அச்சத்தை விடவும் படைப்பாளிகள் எனப்படுவோர் கருத்துகளைக் கூறும்போது கொள்ளும் அச்சம் அதிகமானதாக இருக்கிறது. கோபமும் எங்களை ஆக்கிரமிக்கிறது.
படைப்பாளி தனது ஆன்மாவைப் பிரதிபலிக்கிறார். அவர் தான் அவதானிக்கும் /நோக்கும்/பட்டறியும் சமூக ஆன்மாவைப் பிரதிபலிக்கிறார். படைப்பாளியின் ஆன்மாவும் அவர் பிரதிநித்துவப்படுத்தும் சமூகத்தின் ஆன்மாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அவை இடைத்தாக்கம் அடைபவை. ஒத்திசைவையும் முரண்நிலைகளையும் கொண்டவை. இவைதான் படைப்பான்மாவாக வெளிப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்களைச் சென்றடைகிறது. இங்கு படைப்பின் வடிவங்கள் அவற்றின் இசங்கள் முக்கியமல்ல. படைப்பின் இயக்கம் புனைவின் வெளியில் நிகழ்கிறதா அல்லது யதார்த்த வெளியில் நிகழ்கிறதா என்பதுவும் கூட முக்கியமல்ல. ஆனால் படைப்பில் வெளிப்படும் ஆன்மாவின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. படைப்பவர் வாயைத்திறக்கும் ஒவ்வொரு கணமும் எங்களுக்குக் கேட்பது அந்த ஆன்மாவின் குரல்தான் அந்தக்குரலுக்குத்தான் நாங்கள் வசியப்படுகிறோம் அல்லது அஞ்சுகிறோம் அல்லது கோபப்படுகிறோம்.
உலகத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசியற்காரணங்களுக்காகக் கொல்லப்படும் போது ஒரு படைப்பாளியாக எனது பார்வை எப்படியிருக்கிறது? உலகத்தில் உள்ள சிறுபான்மை இனங்கள் தம்மை அடக்கும் அதிகாரங்களை எதிர்த்துப் போராடும் போது அப்போராட்டங்களை நான் எப்படிப்பார்க்கிறேன்? அடக்கும் அதிகாரங்களினதும் அடக்கப்படும் அதிகாரங்களினதும் நிலைகளை எப்படிப் புரிந்து கொள்கிறேன்? இவற்றுக்கிடையில் இருக்கிற மக்களினது நிலைகளையும் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? என்பவை இங்கு முக்கியமான கேள்விகள். இக்கேள்விகளையும் இவற்றுக்கான பதில்களையும் புரிந்து கொள்ளல் என்பது ஒவ்வொரு படைப்பாளியினதும் நிலைப்பாட்டைப்பற்றிச் சொல்லுகிற அவர்களின் அரசியல் நிலப்பாட்டைப்பற்றிச் சொல்லுகிற ஒன்றாக இருக்கிறது. அரசியல் நிலப்பாடு என்பதை அரசாங்கங்கள், அரசுகள் மற்றும் அரசியற்கட்சிகளைப் பற்றியும் அல்லது விடுதலை அமைப்புகளைப்பற்றியும் ஒருவர் கொண்டிருக்கிற அப்பிராயம் அல்லது சார்புத்தன்மை பற்றியது என்று மட்டுமே நாங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
அரசியல் என்பது உயிர்கள் அதிகாரத்துடன் கொள்ளும் உறவு பற்றியது. உயிர்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியிலும் அதிகாரத்துடன் கொள்ளும் உறவும் முரண்பாடும் தான் அரசியலின் ஊற்றுக்கண். இதுதான் நாங்கள் மேம்போக்காகக் புரிந்து கொண்டிருக்கும் அரசியலாகவும் விரிவடைகிறது.
அதிகாரம் எந்தவொன்றினதும் இருப்புக்கு அவசியமானது. அதே அதிகாரம் இன்னொன்றின் இருத்தலுக்கு எதிரானதாக இருக்கும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. இவ்வுலகில் ஒவ்வொரு உயிருக்கும் அதிகாரம் இருக்கிறது. அதற்கான வெளியும் இருக்கிறது. இப்பூமிப்பரப்பின் வெளி எல்லோரும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்ளக்கூடிய வெளி. ஒரு அதிகாரம் தனக்கிருக்கும் வெளியை அகலப்படுத்தி மற்றவர்களின் வெளியைப் பற்றிக் கொள்ள முயலும் போது, அதிகாரங்கள் தமக்கான வெளிக்கு வெளியே கால் வைக்கும் போது தோன்றும் இரத்தக் களறிகளை ஒரு படைப்பாளி எப்படிப் பார்கிறார் என்கிற கேள்வி வருகிறது. தாவரங்களிற் தொடங்கி விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஈறாக அதிகாரம் தொழிற்படும் முறைபற்றித் தெளிவற்ற படைப்பாளிகள் தம்மைச் சூழ நிகழ்பவைகள் குறித்துத் தெளிவான அறிவைப்பெறுவது சாத்தியமில்லை.
குறித்த இனமொன்றைச் சேர்ந்த ஒருவரோ பலரோ அரசியற்காரணங்களுக்காக கொல்லப்படுகிறார்கள் என்றால் எந்தப் படைப்பாளியின் பார்வையிலும் அது இனப்படுகொலைதான். ஆனால் அதனை ஒத்துக் கொள்வதா? உரத்துக்கூறுவதா? இல்லையா? என்பதில்தான் படைப்பாளியின் அறவுணர்ச்சி வெளிப்படும்.
உலகத்தில் இருந்து ஒருவரைப் பலவந்தமானமுறையில் அகற்றி அகற்றப்படுபவருடைய வெளியை ஒருவர் எடுத்துக்கொள்கிறார்; அகற்றப்பட்டவருக்கு வாழ்வதற்கிருந்த அதிகாரத்தை அவர் பறித்துக்கொள்கிறார். இக்கொலைக்களத்தில் ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையில் இரத்தம்தான் நிரம்பியிருக்கிறது. இன்றைய உலகில் ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையில் அமைதி நிலவுகிறது அல்லது பேச்சு வார்த்தை நிகழ்கிறது என்றால் அங்கு ஒடுக்குமுறை நியாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு இரத்தமில்லாத ஒடுக்குமுறையா அல்லது இரத்தமுள்ள போரா வேண்டும் என்று சிறுபான்மையினரைப் பார்த்துக் கேட்கப்படுகிறது. அர்த்தமுள்ள அமைதி பற்றியோ அர்த்தமுள்ள அதிகாரவெளி பற்றியோ இங்கு பேசப்படுவதில்லை.
அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலியக் கண்டங்களிற் பழங்குடிகளைத் திட்டமிட்ட முறையில் இனவழிப்புச் செய்த அமைப்புகள்தான் அங்கு அரசுகளாக உருப்பெற்றன. ஆர்மேனியர்கள் மீது துருக்கியின் அதிகாரவர்க்கம் செய்த இனவழிப்பு இன்னமும் முறையாக ஒப்புக்கொள்ளப்படவில்லை. இவற்றையெல்லாம் வேறுவேறு கண்களினூடாகப் பார்க்க உண்மையான படைப்பாளிக்கு முடியாமல் இருக்கும்.
மணிப்பூரிலும் காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் இந்திய இராணுவம் புரியும் கொலைகளை, பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவம் புரியும்கொலைகளை, தீபெத்திலும் உய்கூரிலும் சீன அரசாங்கம் புரியும் கொலைகளை, குர்தியர்களின் மீது மேற்கொள்ளப்படும் கொலைகளை, செச்னியாவில் இரஸ்சிய இராணுவம் மேற்கொள்ளும் கொலைகளை ஒருபடைப்பாளி எப்படிப்பார்க்கிறார். பிள்ளையைப்பறிகொடுத்த அம்மாவின் கண்களினூடு பார்கிறாரா அல்லது பிள்ளையைப் பலி எடுத்த அதிகாரத்தின் கண்ணூடாகப்பார்கிறாரா?
முதுகெலும்பும் முறிந்து முள்ளிவாய்க்காலில் நின்ற போராளிகளையும் மக்களையும் ஒன்று சேரக் கொல்ல மனம் வந்த அதிகாரத்தை அதன் இனவெறியைக் காணக் கண்ணற்ற படைப்பாளிகளின் வித்தகத்தை வியத்தலும் இலமே.
தேவ அபிரா
7-08-2016