ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி இந்த விவாதத்தை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானம் நாட்டின் இறைமைக்கு மிகவும் முக்கியமானது எனவும் இது குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமெனவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விவாதம் தொடர்பிலான கோரிக்கைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தின் சில விடயங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் குறிப்பாக ஆறாம் சரத்தில் வெளிநாட்டு நீதவான்கள் குறித்து கூறப்பட்டுள்ள விடயம் அரசியல் சாசனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாட்டின் அரசியல் சாசனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.