Home இலங்கை*பெண்ணிற்கு மட்டும் ஏன் கட்டுபாடு ?* -ஜீவவர்ஷினி-

*பெண்ணிற்கு மட்டும் ஏன் கட்டுபாடு ?* -ஜீவவர்ஷினி-

by admin

 

மனித சமுதாயத்தில் பெண்களுக்கு  எதிரான அடக்குமறை என்பது மிக நீண்டகாலமாக சற்றும் மாறாமல் நிலைத்து வரும் மிகவும் கடுமையான பிரச்சினையாகும். பெண்களை ஆண்கள் அடக்குவதென்பது தற்காலத்திலும் நாம் அடையாளப்படுத்திக் காட்டக்கூடிய ஒரு விடயமாக இருக்கும். அதேவேளை பெண்களுக்கு எதிரி பெண்கள் தான் என சொல்லிக் கொண்டு ஆண்கள் பெண்களின் பின் இருந்து பெண்ணை அடக்கியாளும் ஒரு வகை காணப்படுகிறது. இவ்வாறான அடக்கமுறைகள் உலகளாவிய ரீதியில் ஒவ்வொறு நாட்டுக்கு நாடு வடிவம் மாறினாலும் பெண்களை ஒடுக்கி வைத்திருக்கும் இவ் அடக்க முறை என்பது தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றது. ஒரு பெண் வளர்ந்து வந்து மட்டும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவில்லை. ஒரு பெண் பிறந்த உடனே சில சமுதாயங்களில் அவளின் பாலினமே ஒரு குற்றம் போல பார்க்கப்படுகிறது, காரணம் பெண்கள் மீது உள்ள சமூக நெறிமுறைகளே ஆகும்.

ஆணுக்கு பெண் ஏற்றத்தாழ்வு என்ற கருத்தை எத்தனை பேர் எதிர்த்தாலும் இதற்கெதிராக எத்தனை எழுத்தாக்கங்கள், சிந்தனைகளை வெளிப்படுத்தினாலும் இன்றளவிலும் நாம் சமூகத்தில் காணக்கூடிய ஒரு விடயமாக இவ் ஆண் பெண் ஏற்றத்தாழ்வு என்பது உள்ளது. இதற்கான அடிப்படை காரணமாக குடும்பச்சூழல் காணப்படுகின்றது. பெண்களின் பாதுகாப்பு மீதான பயம், பாலியல் வன்கொடுமைகள், பெண்களை உடமையாக்கும் மனப்பான்மை ஆகியவற்றினால் வீட்டுவேலைகள், குழந்தை பராமரிப்பு போன்ற வேலைகள் பெண்கள் மீது திணிக்கப்பட்டு இல்லத்திற்கே அரசி என இல்லத்தரசியாக வீட்டினுள்ளே ஒடுக்கப்படுகின்றாள். எந்தவொரு வேலையை எடுத்துப் பார்த்தாலும் ஆண்களைவிட குறைவான அளவிலே பெண்கள் காணப்படுவர். அத்துடன் சில வேலைத்தளங்களில் ஆண்களைவிட குறைந்தளவு ஊதியம் பெண்களுக்கு வழங்கப்படுதல் போன்றனவும் காணப்படுகின்றது.

தலைமைப் பொறுப்புக்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றிலும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகளவிளான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இவற்றினால் பெண்கள் தம்முள் இருக்கும் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இயலாத நிலைமையும் காணப்படுகின்றது. இவை மட்டுமன்றி அரசியலிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது. இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நாட்டுத்தலைவராக பெண் இருந்து ஆட்சி செய்த போதிலும் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பில் பெண்களின் ஈடுபாடு குறைவானதாகவே உள்ளது. எவ்வாறு இருந்தாலும் ஆண்களின் பின்னர் பெண்கள் இருக்கும் நிலைதான் இன்றளவிலும் காணப்படுகின்றது. நாம் பேச்சு வழக்கிலும் சரி எழுத்துவழக்கிலும் “ஆண் பெண்” என்றே கூறுகின்றோம். ஏன் “பெண் ஆண்” என்று பெண்களின் பின் ஆண்களை கூறுவதில்லை. இது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

பெண்கள் உடலளவிலும் மனதளவிலும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, தொழில் செய்யும் இடங்களில் ஏற்படும் துன்புறுத்தல்கள் அத்துமீறல்கள் போன்றனவையும் இன்னும் பல இடங்களிலும் அதிகரித்தவாறே காணப்படுகின்றது. பெண்கள் அவர்களின் உரிமையை பாதுகாக்கும் நிலை மறுக்கப்படுவதாலும், முறையீடு செய்வதும் அதற்கான நீதி கிடைக்காமல் போதல்/தாமதமாகுதல் போன்றனவும் இந்நிலையை மிகவும் மோசமாக்ககின்றது. ஆனால் தற்காலத்தில் இவற்றையும் உடைத்துக் கொண்டு வெளிவந்து நீதிக்காக பல பெண்கள் போராடுவதும் நமக்காக ஒரு கூட்டத்தை திரட்டி சங்கங்கள் அமைத்து நீதி கேட்பதும் பெண்களும் சமூகத்தால் விமர்சனத்திற்கு உள்ளாகின்றாள். தமிழில் சொல்லப்போனால் திமிர் பிடித்தவள், அடங்காதவள், ஆண்மூச்சுக்காரி என்றவாறெல்லாம் விமர்சிக்கப்படுகின்றாள்.

கட்டுபாடுள்ள சில சமூக மரபுகள், மத நம்பிக்கைகள் போன்றனவும் பெண்களை கட்டாய கட்டபாட்டினுள் வைத்திருக்கின்றது. பிரதானமாக ஆடை விடயத்தில் சில சமூக அமைப்புகள் மிக இறுக்கமான கட்டுபாடுகளை விதிக்கின்றன எடுத்துகாட்டாக – சைவசமய பெண்கள் ஆலயத்திற்கு செல்லும் போது புடவை அணிவது சைவசமய மரபு என்ற வகையில் திணிக்கப்படுகின்றது. இது மாத்திரமல்லாமல் திருமணமும் இவ்வாறு கட்டுபாட்டினுள் வைக்கப்பட்டுள்ளது. பெண் விரும்பும் ஒருவரை தேர்வு செய்யாமல் இனம், மதம், சாதி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அவளுக்க விருப்பம் இல்லை என்றாலும் அவளின் ஆசை நிராகரிக்கப்பட்டு கட்டாய திருமணம் இன்றளவிலும் சில இடங்களில் நடக்கும் நிலை காணப்படுகின்றது. பெண்கள் வெளியில் செல்லும் நேரம் வீட்டிற்கு திரும்பும் நேரம் என்பனவும் கட்டமைக்கப்பட்டுள்ளதாக உள்ளது. பெண்கள் மாலை 6.00 மணிக்கு முன் விட்டில் இருக்க வேண்டும். எனும் மரபு இப்போதும் காணப்படுவது நாம் அறிந்த ஒன்று.

ஒரு பெண் தனக்கு சுதந்திரமான பிடித்த ஆடை அணிவதென்பது மிகப்பெரும் போராட்டமாகவே உள்ளது. அதுமட்டுமன்றி தனக்கு பித்தவர்களடன் பழகுவது. பிடித்த துறையை தேர்ந்தெடுப்பது, பிடித்தவற்றை செய்வது போன்றன பல பெண்களுக்க வெறும் கனவாகவே முடிகின்றது. இவற்றையும் மீறி பிடித்தாற்போல வாழும் பெண்களுக்கு தன் கூடவே இருக்கும் நபர்களே தவறாகப் பேசும் நிலை காணப்படுகின்றது. தன்னைப் பற்றி தெரியாதவர்கள் தவறாக பேசுவதை கண்டுகொள்ளாமல் முன்னேற நினைப்பவர்களுக்கு தன்னைப்பற்றி எல்லாம் அறிந்தவர்கள் பேசுவது மிகப்பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இவ்வாறான செயல்களாலும் பெண்கள் ஒடுங்கியே வாழ்கின்றனர். ஒரு பெண் தனது ஆண் நண்பர்களுடன் பேசிப் பழகினால் கூட பெண்களை நடத்தை தவறானவளாக குற்றம் சொல்லும் நிலைப்பாடு பல சமூகத்தில் காணப்படுகின்றது.

ஒரு பெண் பல ஆண்களுடன் பழகினால் தவறாகப் பேசுவார்கள் ஆனால் ஒரு ஆண் எத்தனை பெண்களுடன் பழகினாலும் அது குற்றமில்லை என்ற கருத்து காணப்படுகின்றது. இது எந்த வகையில் ஞாயமாகும். ஒரு ஆண் அனைவருக்கும் தெரியும் வகையில் பெண்களுடன் காதல். பாலியல் உறவு கூட வைத்துக் கொள்வான். ஆனால் இவற்றை ஒரு பெண் செய்தால் அவள் தவறான நடத்தை கொண்டவள் எனப் பெயர் பெறுவாள். “ஆணுக்கொரு ஞாயம் பெண்ணுக்கொரு ஞாயம்”. இச் சமூதாயம் இன்னுமின்னும் இவ்வாறு பெண்களை அடக்கிக் கொண்டே போனால் பெண்களின் சுதந்திரம், ஆசைகள், கனவுகள் எங்ஙனம் செல்வது?

 

-ஜீவவர்ஷினி-

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More