விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் - விகாராதிபதி திட்டவட்டம் - விகாரை முன் காவல்துறையினா் குவிப்பு

by admin

 

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி  காவல்   நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் , விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி  காவல்   நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதேவேளை , நேற்றைய தினம் இரவு மூன்று பேருந்துக்களில் தென்னிலங்கையில் இருந்து , விகாரை வழிபாட்டிற்கு என பலர் வருகை தந்து விகாரையில் தங்கியுள்ளனர். இந்நிலையில், இன்றைய தினம் காலை பலாலி காவல்துறையினா்  விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை தமது காணிகளை அடையாளம் காட்ட என காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு வந்துள்ளனர்.  இருந்த போதிலும் , காலை 09.30 மணி வரையில் , காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் , காணி உரிமையாளர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.
அதேவேளை, காணி அளவீட்டு பணிகள் தொடர்பில் புத்த சாசன அமைச்சோ , மாவட்ட செயலரோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதனையும் வழங்கவில்லை. உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இல்லாமல் , விகாரை காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என விகாராதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

#Thaiyiddy Vihara #Land Dispute #Land Survey #Jaffna #Sri Lanka #Chief Monk #Complaint Filed #Palali Police #Temple Issue #Land Owners

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More