Home இலங்கை“ரிக்ரொக்” தலைமுறையை  வென்றெடுப்பது?  நிலாந்தன்!

“ரிக்ரொக்” தலைமுறையை  வென்றெடுப்பது?  நிலாந்தன்!

by admin

 

“ரிக்ரொக்” தலைமுறையை  வென்றெடுப்பது?  நிலாந்தன்!

கடந்த மாதம் ஏழாம் தேதி யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டது.கட்சியின் செயலாளர் மத்தும பண்டார தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.பின்னர் நிகழ்ந்த கருத்தரங்கில் சுமார் 150க்கும் குறையாத  இளவயதினர் கலந்து கொண்டார்கள்.இவர்களில் அதிகமானவர்கள் 25-30 வயது வரையானவர்கள். கிட்டத்தட்ட ஐந்து பேர் 30வயதிற்கும் அதிகமானவர்கள்.

கலந்துரையாடலின் இறுதிக் கட்டத்தில் இளையோர் பேசினார்கள்.அவர்களை 7 குழுக்களாகப் பிரித்து அவர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது.அதில் கிட்டத்தட்ட மூன்று குழுக்களைச் சேர்ந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் காலத்தைப் புகழ்ந்தும் அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளைப் போற்றியும் பேசியிருக்கிறார்கள்.ஏனைய 4 குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாட்சியை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள் என்பதைத் தொகுத்துக் காணக்கூடியதாக இருந்தது.ஆனால் அந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலையோ அதன் தலைவர் சஜித் பிரேமதாசவையோ யாரும் புகழ்ந்து பேசியதாக ஞாபகம் இல்லை என்று கூறப்படுகிறது.இது முதலாவது சம்பவம்.

இரண்டாவது சம்பவம், அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவ முதலீட்டாளர் என்னிடம் கேட்டார்,”என்னுடைய 20 வயதுப் பிள்ளை கைபேசியில் பார்க்கும் “ரீல்ஸ்”களில் பெருமளவுக்கு அனுரதான் காணப்படுகிறார். ஏன் தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒருவரையும் காணவில்லை? புதிய தொழில்நுட்பத் தளத்தில் யார் நிற்கிறார்கள்?எழுந்துவரும் ஒரு புதிய தலைமுறை எந்தத் தலைவரை எந்த அரசியலை ஆர்வத்தோடு பார்க்கிறது? ” என்று.

மூன்றாவது,அண்மையில் மன்னாரில் முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடைய நினைவுப் பேருரை ஆற்றுவதற்காக மன்னாருக்குச் சென்றிருந்தேன்.என்னுடைய நண்பர் ஒரு வாகனத்தை ஒழுங்குபடுத்தித் தந்தார்.அந்த வாகனத்தின் சாரதியாக வந்தவர் அரசியலில் ஆர்வம் உடையவராகக் காணப்பட்டார்.ஒருகட்டத்தில் அவர் தன்னை வெளிப்படுத்தினார்.அவர் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்பதையும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்களோடு பழகுபவர் என்பதையும் அவருடைய பேச்சிலிருந்து உணரக்கூடியதாக இருந்தது.தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.என்பிபி அரசியல்வாதிகளை தோழர்கள் என்று வாஞ்சையோடு விழித்தார் .

மன்னாரிலிருந்து திரும்பிவரும் பொழுது ஒருகட்டத்தில் அவர் எங்களோடு மனந்திறந்து கதைக்கத் தொடங்கினார்.அவருடைய குடும்பத்தில் இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.ஒரு பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார்.இறுதிக் கட்டப் போரின் போது மோதல்கள் முடிவதற்கு சில நாட்களுக்கு முன் அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதன்பின் அவர் என்னவானார் என்பது யாருக்கும் தெரியாது.அவருடைய தாயார் போய்ப் பார்த்த எந்த ஒரு ஜோதிடராலும் அதைச் சொல்ல முடியவில்லை.

போரில் ஈடுபட்ட,போரில் இழக்கக் கொடுத்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தேசிய மக்கள் சக்திக்காக இப்பொழுது வேலை செய்கிறார்.தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் தங்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்துகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுத்தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.எனினும் அவரிடம் நான் கேட்ட மிக அடிப்படையான கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.விசுவாச நிலைப்பட்ட பதில்கள்தான் கிடைத்தன.கட்சியின் மூத்த தோழர்களிடம் அந்தக் கேள்விகளைக் கேட்டால் எனக்குப் பதில் கிடைக்கும் என்று சொன்னார்.

மேற்கண்ட மூன்று விடயங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

கடந்த சில ஆண்டுகளில்,கிராம மட்டத்தில் சனசமுக நிலையங்கள்,மத நிறுவனங்கள்,அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற கூட்டங்களில் கதைக்கும்போது ஒரு விடயத்தைத் தொகுத்துக் கவனிக்கக்கூடியதாக இருந்தது.அவ்வாறான கூட்டங்களுக்கு அதிகமாக 40வயதைக் கடந்தவர்கள்தான் வருகிறார்கள்.30 வயதுக்குக் கீழ்ப் பட்டவர்கள் மிகக் குறைவு.ஏற்பாட்டாளர்களும் அதைக் கவனிப்பதில்லை. அல்லது ஏற்பாட்டாளர்களால் அந்த வயதுக்காரர்களை அணுக முடியவில்லை.

அப்படியென்றால் தமிழ்த் தேசிய உரையாடல் என்பது இப்பொழுது யார் மத்தியில் நிகழ்கிறது?சமூக வலைத்தளச் சூழலில் அதிகமாக அரசியல் விவாதங்களைக் காண்கிறோம்.ஆனால் இந்த விவாதங்களில் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் அல்லது 20 வயதுக்கு உட்பட்டவர்கள் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்? இவர்கள் எந்த அரசியலை விரும்பி ரசிக்கிறார்கள்? அல்லது ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்? இது தொடர்பாக தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் எந்தத் தமிழ்க் கட்சியிடமாவது உண்டா ? ஏன் அதிகம் போவான்? எந்த ஒரு கட்சியிடமாவது இந்த வயதுக்காரர்களை ஒருங்கிணைக்கத்தக்க கட்டமைப்புகள் அல்லது வேலைத்திட்டங்கள் உண்டா?

தமிழ்த் தேசிய அரசியலானது அதிகம் உத்வேகம் பெற்ற காலகட்டத்தில் அதாவது 1960களின் பின்பகுதியில் இருந்து தமிழ்த் தேசியவாதம் முன்வைத்த கோஷங்கள்,நியாயங்கள்,தர்க்கங்கள் போன்றவற்றைத்தான் இப்பொழுதும் தமிழ்த் தேசியவாதிகள் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்களா?

ஆனால் தலைமுறைகள் தோறும் சுவைகளும், ரசனைகளும் தெரிவுகளும் மாறி வருகின்றன.குறிப்பாக கைபேசிகளின் கைதிகளாக உள்ள ஒரு தலைமுறையின் கவனத்தைக் கவரத்தக்க விதத்தில் புதுப்பிக்கப்பட்ட  உரையாடல்களை எத்தனை தமிழ்த் தேசிய கட்சிகள் முன்வைத்திருக்கின்றன?

தலைமுறைகள் தோறும் ரசனைகளும் ருசிகளும் மாறும்.இதற்கு மிகக் கூர்மையான ஒர் உதாரணத்தை இங்கு காட்டலாம். தமிழ்த் தேசியவாதம் தனி நாட்டுக் கோரிக்கையாக எழுச்சிபெற்ற காலத்தில்,தாடி வளர்ப்பது என்பது மூன்றுவிதமாகப் பார்க்கப்பட்டது. ஒன்று சன்னியாசிகள்.அதாவது முற்றிலும் துறந்தவர்கள் தாடி வளர்ப்பார்கள்.இரண்டு,வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் அல்லது காதலில் தோல்வி அடைந்தவர்கள் அல்லது ஏதோ ஒரு விடயத்தில் தோல்வி அடைந்தவர்கள் அந்த விரக்தியின்,தோல்வியின் சின்னமாக தாடியை வளர்ப்பதுண்டு.அது அந்த காலத்தில் “தேவதாஸ் தாடி” என்றும் அழைக்கப்படுவதுண்டு. மூன்றாவது புரட்சியாளர்கள்.அதாவது சமூகத்துக்காக தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்கள்.இவர்களும் தாடி வளர்ப்பார்கள்.

இதுதான் அந்தத் தசாப்தத்தில் தாடிக்கு அர்த்தம்.ஆனால் அதற்குப் பின்னரான கடந்த அரை நூற்றாண்டு காலத்தின் பின் இப்பொழுது தமிழில் திரைப்படங்களாகட்டும் திரைத் தொடர்களாகட்டும் எல்லாவற்றிலுமே தாடி கதாநாயக லட்சணமாக வந்துவிட்டது.மண மேடைகளில்,மணமகன் தாடியோடு காட்சி தருகிறார். முன்னைய தசாப்தங்களில் மண மேடைகளில் மணமகன் தாடியோடு இருப்பதை மூத்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அது விரக்தியின் அடையாளம் என்று கூறி அதனை வழிக்குமாறு வற்புறுத்துவார்கள். ஆனால் இன்றைக்கு தாடி ஒரு பொதுவான போக்காக, இள வயதுக்காரர்களின் பொது விருப்பமாக மாறி வருகிறது.தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உக்கிரமடைந்த காலகட்டத்தில் காணப்பட்ட தாடியும் இப்பொழுது 2009க்கு பின்னரான கடந்த 16 ஆண்டுகளிலும் வளர்ந்து வரும் தாடியும் ஒன்றல்ல.

அப்படித்தான் 1970களில் காணப்பட்ட இலட்சியவாத வகைப்பட்ட உரையாடல்களும் கோஷங்களும் இப்பொழுதும் செல்லுமா?அல்லது அவை அப்டேட்-இற்றைப்படுத்தப்பட வேண்டுமா?அன்றைக்கு இருந்த இளைய தலைமுறைக்கு தமிழ்த் தேசியவாத அரசியலை எடுத்துக்கூறிய அதே பாணியில் அதே வார்த்தைகளில் இப்போதுள்ள தலைமுறைக்கும் அதை எடுத்துக்கூற முடியுமா ?

இலட்சியங்கள்,இறுதி இலக்குகள் மாறாது.ஆனால் அவற்றை எடுத்துக்கூறும் எடுத்துரைப்புகளிலும் எடுத்துரைப்புப் பாணிகளிலும் மாற்றங்கள் தேவை. ஒரு தலைமுறையின் மொழி நடை உச்சரிப்பு எல்லாமே மாறிக்கொண்டு வருகின்றன. அதில் தாய் மொழியின் தனித்துவம்,பிரதேச வழக்கு போன்றன தமிழ் சினிமா மொழியால் அதிகம் பிரதியீடு செய்யப்படுகின்றன.ஒரு வித நுனி நாக்குத் தமிழ் ஒரு பொதுவான பாணியாக மாறி வருகிறது.தமது தாய் மொழியை வழுக்கிவழுக்கிக் கதைப்பது;ஆங்கிலத் தனத்தோடு எடுப்பாக உச்சரிப்பது என்பது ஒரு பொதுப்போக்காக மாறிவருகிறதா?சினிமாப் பாத்திரங்கள் அல்லது தமிழ்த் திரைத்தொடர் பாத்திரங்கள் அல்லது சினிமா மற்றும் தமிழ்த் தோலிக் காட்சிகளின் நீட்சியாகவும் அகட்சியாகவும் காணப்படுகிற நிகழ்ச்சிகள்,அரங்குகளில் பயன்படுத்தப்படுகின்ற அதே மோடிப்படுத்தப்பட்ட,செயற்கையான,சோடிக்கப்பட்ட,நுனி நாக்குத் தமிழை ஒரு தலைமுறை ஆர்வத்தோடு பேசுமுயல்கிறதா?

கடந்த கிழமை யாழ் ரீகல் தியட்டரில் “நீளிரா” திரைக்காட்சியின் பின் நடந்த சந்திப்பில் தயாரிப்பாளரும் நெறியாளரும் படப்பிடிப்பாளரும் நடிகர்களும் உட்பட ஒரு பகுதி கலைஞர்கள் வந்திருந்தார்கள்.அவர்களோடு பார்வையாளர்கள் உரையாடினார்கள்.அந்த உரையாடலில் நடுத்தர வயதைக் கடந்த குறிப்பிட்ட சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் முன்சொன்னது போல நுனி நாக்கால் தமிழ் பேசினார்கள்.அதில் அனேகமானவர்கள் நீளிராவில் யாழ்ப்பாணத்துத் தமிழ் அதே பிரதேச வழக்கோடு பேசப்பட்டிருப்பதைப் பாராட்டினார்கள். ஆனால் அதை ஒருபகுதியினர்பாராட்டியது தமது தாய்த் தமிழ் பேச்சு வழக்கில் அல்ல.வணிக சினிமாவின் பெரு நிறுவன மேடைகளில் ஒலிக்கும் நுனி நாக்குத் தமிழில்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்காரர்களில் ஒருபகுதியினரின் ஆர்வம் எது? ரசனை எது ?விருப்பத் தெரிவு எது?என்பவற்றையெல்லாம் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் விளங்கி வைத்திருக்கிறார்களா? அல்லது அவர்களைவிட அதிகமாக தேசிய மக்கள் சக்தி விளங்கி வைத்திருக்கின்றதா?

அண்மையில்,உடுவிலில்,கட்சிக்கான தொடர்பாடல் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து சுமந்திரன் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதில் அவர் மக்களை நெருங்கிச் செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். தமது வாக்காளர்களின் நாடித் துடிப்பைக் கண்டறிய வேண்டும் என்று அவர் யோசித்திருப்பது நல்ல விடயம்.குறிப்பாக இளைய தலைமுறையை அரசியலில் உணர்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது.

மக்களை நெருங்கிச் செல்ல வேண்டும்.மக்களின் சுக துக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.மக்களின் நாடித்துடிப்பை அறிந்திருக்க வேண்டும்.மக்களைத் திரட்டுவதற்கு அவை மிக அவசியம்.அதேசமயம் மக்களை நெருங்கிச் செல்ல முன் தனது கட்சிக்குள்ளேயே ஒரு பகுதியினரை 75 வயதுடைய கட்சி நெருங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.கட்சிக்குள் ஒரு பகுதியினரின் குமுறல்களையும் கொதிப்பையும் வெறுப்பையும் கசப்பையும் அப்படியே நீறுபூத்த நெருப்பாகப் பேணிக்கொண்டு “எங்களுக்குள் ஒரு பிரச்சினையும் இல்லை.நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம்” என்று கூறிக் கொண்டிருக்க முடியாது.தேசத்தைத் திரட்ட முன் கட்சியைத் திரட்ட வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More