120
இந்தியாவிலிருந்து மன்னார் கடல் ஊடாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முயன்ற பிரித்தானியப் பிரஜை ஒருவர் மற்றும் அவருக்கு உதவிய இரு படகோட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியக் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் அப்துல் சலாம் மொகமது சாலிம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இந்தியாவிலிருந்து விசைப்படகு ஒன்றின் மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட போது, நடுக் கடலில் வைத்து பாதுகாப்புத் தரப்பினரால் வழிமறிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரையும், அவரை ஏற்றி வந்த மன்னார் பேசாலை மற்றும் வங்காலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு படகோட்டிகளையும் பாதுகாப்புத் தரப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். எவ்வாறாயினும், ஆரம்பத்தில் இந்த கைது நடவடிக்கை குறித்து கடற்படையினரிடம் வினவிய போது, அவ்வாறான எவ்விதக் கைதுகளும் இடம்பெறவில்லை என அவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், தற்போதைய தகவல்களின்படி கைது செய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜை உள்ளிட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் எதற்காக இம்முறைப்படி இலங்கைக்குள் நுழைய முயன்றார் என்பது தொடர்பில் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முறையான விசா மற்றும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி எல்லை தாண்டி நுழைந்தமைக்காக இவர்கள் மீது குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
Spread the love

