Home இலங்கைபாதுகாப்பு வலயக் காணிகள் விவகாரம்: விடுவிக்கக்கூடிய அனைத்துக் காணிகளையும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உறுதி!

பாதுகாப்பு வலயக் காணிகள் விவகாரம்: விடுவிக்கக்கூடிய அனைத்துக் காணிகளையும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் – பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உறுதி!

by admin
பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள, விடுவிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள அனைத்துக் காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவித்து மக்களிடம் ஒப்படைக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களின் சொந்தக் காணிகளை அவர்களிடமே மீண்டும் வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நேரடி ஆலோசனைக்கு அமைவாகவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தனியார் காணிகள் மற்றும் பொதுக் காணிகளில் நீண்டகாலமாக இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, காணி விடுவிப்புத் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு நேரில் ஆராயுமாறு ஜனாதிபதி தமக்கு விசேட பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மக்களின் காணிகளில் அமைந்துள்ள பாதுகாப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள தற்போதைய நிலவரங்களை ஆராய்ந்து, உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை மீள ஒப்படைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன், ஏனைய காணிகள் தொடர்பிலான கள ஆய்வு அறிக்கைகள் பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
தற்போது எவ்வளவு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என திட்டவட்டமாகக் கூற முடியாது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், சில காணிகளில் சட்ட ரீதியான சிக்கல்கள் இருப்பதையும், தேசிய பாதுகாப்புக்குத் தேவையான முக்கிய காரணிகள் காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இதனால் குறிப்பிட்ட ஒரு அளவை இப்போதே நிர்ணயிக்க முடியாவிட்டாலும், விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள அத்தனை காணிகளையும் உரிய முறையில் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More