தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு பெண் மருத்துவ அதிகாரி ஒருவரைத் தொந்தரவு செய்யும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவதூறுகளைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்புக் கட்டளை, நேற்று (2026 ஜூன் 19, வெள்ளிக்கிழமை) மேலதிக நீதவான் நஜ்மி ஹூசைன் முன்னிலையில் வழங்கப்பட்டது.
வழக்கின் முதலாவது எதிர்த்தரப்புவாதியான மருத்துவர் ஜெயக்குமார் பேசிய கருத்துகள் அவதூறானவை அல்ல என நீதிமன்றம் கருதியதால், அவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார். இரண்டாவது எதிரியான நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, “அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்குப் பேச்சுச் சுதந்திரம் (Freedom of Speech) உள்ளது” என வாதிட்டார். எனினும், அதனை நீதவான் வன்மையாக நிராகரித்தார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் பொறுப்பற்ற சமூக ஊடகச் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டிப் பின்வரும் கட்டளைகளைப் பிறப்பித்துள்ளது:
-
பேச்சுச் சுதந்திரத்தின் எல்லை: நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் பேச்சுச் சுதந்திரத்திற்கு என்று ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உண்டு. எந்தவொரு முறையான சான்றுகளும் இன்றி ஒரு மருத்துவ அதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, அல்லது அவர் ஊழல் புரிந்தார் என்றோ அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை.
-
காணொலிகளை நீக்க உத்தரவு: பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு எதிராக இதுவரை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அனைத்து அவதூறான மற்றும் போலிப் பிரச்சாரக் காணொலிகளையும் (Videos) உடனடியாக நீக்க வேண்டும் (Take down).
-
தொடர் தடை: பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு எதிராக இனிமேல் எவ்விதமான அவதூறு மற்றும் போலிப் பரப்புரைகளையும் சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ முன்னெடுக்கக் கூடாது.

