வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ (Declaration Deed) மூலம் நீண்டகாலமாக அரங்கேறி வரும் பாரிய காணி மோசடிகளை முற்றாகத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் (Notaries Act) அவசர சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் இணைந்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் உறுதியளித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 160 ஆண்டுகால வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள திருமதி சசிதேவி ஜலதீபன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன், இன்று (2026 ஜூன் 24, புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே இத்தீர்மானங்கள் எட்டப்பட்டன.
கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்துப் பேசிய ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கில் நிலவும் காணி ஆக்கிரமிப்பு மற்றும் போலி ஆவணத் தயாரிப்புகள் குறித்துப் பல கசப்பான உண்மைகளைப் பகிரங்கப்படுத்தினார்:
“வெளிப்படுத்தல் உறுதிகளை முற்றாகத் தடை செய்வது எமது நோக்கமல்ல. ஆனால், வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பூர்வீகக் காணிகள் கூட, இத்தகைய போலி வெளிப்படுத்தல் உறுதிகள் மூலம் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.”
போலி உறுதிகளை எழுதுவதற்குப் பதிவாளர் திணைக்களத்திலுள்ள சில அதிகாரிகள் உடந்தையாக இருந்து, காணிகளின் மூல ஆவணங்களான தோம்புகளை (Thombos) அழித்துள்ளமை கவலைக்குரியதாகும். கடந்த ஆட்சியின் போது காணி மோசடிகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகளைக் கைது செய்வதற்குப் பொலிஸார் சட்டமா அதிபரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இவ்விடயத்தை நான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, தற்போது அந்தத் தடைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன என ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் மேலதிக மாவட்டச் செயலாளர்கள் (காணி) கூட்டத்தில் தங்களது நடைமுறைச் சிக்கல்களைத் தெரிவித்தனர். ஒரு காணி அரச காணியா அல்லது தனியாருக்குச் சொந்தமானதா என்பதை உறுதிப்படுத்தப் பதிவாளர் திணைக்களம் 14 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்குவதால் பதிலளிப்பது சவாலாக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்குப் பதிலளித்த பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன், 2022ஆம் ஆண்டு சுற்றறிக்கையின்படி அரச காணியா என்பதை உறுதிப்படுத்தப் பிரதேச செயலாளர்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளதாகவும், தேவையேற்படின் கால நீடிப்பு கோரலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.
அரச காணியொன்று வெளிப்படுத்தல் உறுதி மூலம் மோசடியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பின்னர் அதனைச் சட்டப்பூர்வமாக இரத்துச் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக வடக்கு மாகாண காணி ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
காணி மோசடிகளை வேரறுக்க நொத்தாரிசு சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய பரிந்துரைகள் இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்டன. எதிர்காலத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் காணிகள் பதிவு செய்யப்படும் போது, அதனைப் பத்திரிகைகளில் பகிரங்கமாக விளம்பரப்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என ஆளுநர் முன்மொழிந்தார்.
இக்கலந்துரையாடலில் பங்கேற்ற முன்னாள் மாவட்ட நீதிபதி க.அரியநாயகம், வெளிப்படுத்தல் உறுதிகளைப் பதிவு செய்யும்போது காணியின் வரைபடம் (Plan) மற்றும் நான்கு எல்லைகளிலும் உள்ள காணி உரிமையாளர்களிடமிருந்தான சத்தியக்கடதாசிகளை (Affidavits) கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
#LandDeedScamSL #GovernorVedhanayagan #RegistrarGeneralSL #DeclarationDeedFraud #JaffnaLandRegistry

