50
“மதுஷிற்கு நேர்ந்த கதியேற்படும்…” – சிக்கிய இரகசிய தொலைபேசி அழைப்பு!
டுபாய் பயணம் மற்றும் முன்னாள் நீதி அமைச்சரின் பெயர்!
50 கோடி ஒப்பந்தமும் 12 கோடி முற்பணமும்!
நிராகரிக்கப்பட்ட பிணை மனுக்கள்!
இலங்கையையே உலுக்கியுள்ள பாரிய பாதாள உலகச் சதித்திட்டம் மற்றும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மூவர் எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் அதிர்ச்சியூட்டும் தொலைபேசி உரையாடல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ‘ஹரக் கட்டா’ என்பவரை, பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு மாற்றாமல் தடுத்து, அவரது உயிரைப் பாதுகாத்து வேறு இடத்திற்கு மாற்றித் தருவதாக சரித் அபேசிங்க, டுபாயில் உள்ள ‘ஹெர்பி’ என்பவருக்கு உறுதியளித்துள்ளார். “அவ்வாறு செய்யாவிட்டால் மாக்கந்துரே மதுஷிற்கு நேர்ந்த கதியே ஹரக் கட்டாவிற்கும் ஏற்படும்” என்றும் அவர் அந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சதித்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இரகசியமாக டுபாய் சென்றுள்ளனர். அங்குள்ள இரகசிய இல்லமொன்றில் வைத்து ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷானி (மதுஷிகா) மற்றும் மிதிகம ருவன் ஆகியோரைச் சந்தித்துள்ளனர். நீதிமன்றில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வெளியிட்ட அதிரடித் தகவலின்படி, இந்த டுபாய் பயணத்தில் அன்றைய காலகட்டத்தில் நீதி அமைச்சராக இருந்தவரும் கலந்துகொண்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரக் கட்டாவின் உயிரைக் காப்பாற்றி, விசாரணைகளைத் தளர்த்தி, பூஸ்ஸ சிறையிலிருந்து மாற்றுவதற்காக இந்த “அதிகாரக்கரங்கள்” முதலில் கோரிய இலஞ்சத் தொகை 50 கோடி ரூபாயாகும். பின்னர் அது 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் 12 கோடி ரூபாய் ஏற்கனவே முற்பணமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் பல்வேறு மருத்துவக் காரணங்கள் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி பிணை கோரி கடுமையாக வாதிட்ட போதிலும், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அந்த கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தார். இதற்கமைய, எவ்வித விசேட சலுகைகளும் இன்றி மூவரும் நேரடியாக சிறையிலடைக்கப்பட்டனர். பாதாள உலகப் பணத்திற்காக நாட்டின் சட்டத்தையும் பாதுகாப்பையும் விளையாட்டாகக் கருதியவர்களின் இந்தச் சதி விவகாரம், ஜூலை 3 ஆம் திகதி அடுத்தகட்ட விசாரணைகளில் இன்னும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love

