Home இலங்கையாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் தொடர்ந்த வழக்கு: துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் உட்பட 14 பேருக்கு எதிராக நீதிமன்றில் மனு!

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் தொடர்ந்த வழக்கு: துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் உட்பட 14 பேருக்கு எதிராக நீதிமன்றில் மனு!

by admin
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம், தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாகத் தெரிவித்து, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் (Online Safety Act) 20ஆம் பிரிவின் கீழ் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், குற்றச்சாட்டை முன்வைத்துள்ள முன்னாள் மாணவி, அவரது தோழி மற்றும் முகநூல் (Facebook), டிக் டொக் (TikTok), யூடியூப் (YouTube) ஆகிய சமூக ஊடகங்களின் இணைய இடையீட்டாளர்கள் (Internet Intermediaries) உட்பட 14 தரப்பினர் இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் தமக்குத் துஷ்பிரயோகம் இழைத்ததாக, அங்கு தற்காலிக உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றிய முன்னாள் மாணவி ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவியுடன் பேராசிரியர் உரையாடியதாகக் கூறப்படும் சில தொலைபேசி ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.
தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பிரசுரிக்கப்பட்டதாகக் கூறி, பேராசிரியர் ரகுராம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். இந்த மனு அண்மையில் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்மனுதாரர்களுக்கு எதிராக நிபந்தனையுடனான இடைக்காலக் கட்டளையைப் பிறப்பிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்க்கமான முடிவை அறிவிப்பதற்காக, வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More