Home இலங்கைஅமைச்சரவை ஒப்புதல் கிடைத்து 2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை

அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து 2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை

by admin

 முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிங்களப் பாடசாலைகளில், கடந்த 9 வருடங்களுக்கும் மேலாக உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றி வரும் தமக்கு, கடந்த கால அரசாங்கத்தினால் அமைச்சரவை (Cabinet) அனுமதி வழங்கப்பட்டும் இதுவரை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமக்கான நிரந்தர நியமனங்களை இந்த அரசாங்கம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று (02) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இதனைத் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:

“நாங்கள் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக அறிவியல் (Science) மற்றும் கணிதப் (Maths) பாடங்களுக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து நியமனம் பெற்று வரும் ஆசிரியர்கள், எமது பிரதேசத்தில் நிலவும் கடினமான சூழ்நிலைகள் மற்றும் கஷ்டங்கள் காரணமாக நீண்ட காலம் தங்கிப் பணியாற்றுவதில்லை. அவர்கள் உடனடியாகத் தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவே முயல்கின்றனர். இதனால் எமது பகுதி மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

எமது பிள்ளைகள் படும் கல்வி அவதியைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல், அப்பிரதேசத்தில் கல்வி கற்ற நாங்கள் ஒன்றிணைந்து 2018ஆம் ஆண்டிலிருந்து உதவி ஆசிரியர்களாகக் கற்பித்து வருகிறோம். நாம் அனைவரும் கற்பித்தலுக்குரிய தகுதிகளைக் கொண்டிருப்பதனாலேயே அன்றைய அதிகாரிகள் எங்களைச் சேவையில் இணைத்துக்கொண்டனர். கடந்த 9 வருடங்களாகப் பலதரப்பட்ட சம்பளப் பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் எமது மாணவர்களின் எதிர்காலத்திற்காகவே நாம் பணியாற்றி வருகிறோம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, எங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களைப் பொதுச் சேவையில் உள்வாங்குவதற்காக அமைச்சரவை ஒப்புதல் (Cabinet Approval) கிடைத்தது. மாகாண மட்டத்திலும் இதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டன. ஆனால், அமைச்சரவை ஒப்புதல் கடிதம் இருந்தும் அதற்கு மேல் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. நிர்வாக ரீதியாக எங்களுக்கு முறையான பதிலும் கிடைக்கவில்லை.”

எனவே, தாங்கள் படும் துயரங்களையும், மாணவர்களின் கல்வி நலனையும் கருத்திற்கொண்டு, தமக்குரிய நிரந்தர நியமனங்களை உடனடியாக வழங்கி நீதியைப் பெற்றுத்தருமாறு தற்போதைய அரசாங்கத்திடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 #Mullaitivu #Welioya #Manalaru #TeacherShortage #SriLankaEducation #JaffnaPress #NorthernProvince

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More