முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி, பூக்குளம் ஊடாக பள்ளகண்டல் அந்தோனியார் ஆலயத்திற்குச் செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடுமாறு கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்று திங்கட்கிழமை (06) காலை பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பாரம்பரியமிக்க பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் யூலை மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்று, தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, யூலை மாதம் 12 ஆம் திகதி திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் மன்னார் மாவட்டம் மற்றும் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் கத்தோலிக்க மக்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி இந்தப் பாதையூடாகவே ஆலயத்திற்குச் சென்று வந்தனர். ஆனால், இம்முறை முள்ளிக்குளத்தில் இருந்து மறிச்சிக்கட்டி, பூக்குளம் வழியாகச் செல்லும் பாதையைப் பயன்படுத்துவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கமான பாதையூடாகச் சென்றால் மக்கள் 30 கிலோ மீற்றர் தூரமே பயணிக்க வேண்டும். ஆனால், தற்போது தங்களை அனுராதபுரம் பாதையூடாகச் செல்லுமாறு அதிகாரிகள் கூறுவதாகவும், அவ்வாறு சென்றால் 250 கிலோ மீற்றர் தூரம் வரை பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது தமக்கு சாத்தியமற்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கமும் உரிய திணைக்களங்களும் இவ்விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் முள்ளிக்குளம் பிரதான வீதியில் மக்கள் அமைதியான முறையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை டெரன்ஸ் குளாஸ், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 8 ஆம் திகதி கொடியேற்றம் நடைபெறவுள்ளதால், திருவிழா நிறைவடையும் 12 ஆம் திகதி வரையிலாவது தற்காலிகமாக இந்தப் பாதையைப் பயன்படுத்த உரிய அதிகாரிகள் துரிதமாக அனுமதி வழங்க வேண்டும் என முள்ளிக்குளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#Mannar #Mullikulam #PallankandalChurch #Protest #SriLankaNews

