Home இலங்கைநீா்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – உயிரிழப்பு  ஏழாக அதிகாிப்பு

நீா்கொழும்பு சிறைச்சாலை வன்முறை – உயிரிழப்பு  ஏழாக அதிகாிப்பு

by admin

 

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும், நான்கு கைதிகளும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நீா்கொழும்பு  சிறைச்சாலையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கைதிகள் மோதலைத் தொடர்ந்து,  இன்று திங்கட்கிழமை காலை மீண்டும் வன்முறை வெடித்ததிலேயே இவ்வாறு உயிாிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததுடன், 38 கைதிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 32 பேர் தற்போது   நீா்கொழும்பு   வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 20 பேருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் மூவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் நடைபெற்ற போராட்டத்தின் போது கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை மோதலைத் தொடர்ந்து மூன்று கைதிகள் பல்லன்சேனை சிறை முகாமுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விசேட விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதனுடன், காவல்துறையினரும் தனித்தனி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் குழுவுக்கும் அதற்கு எதிராகச் செயல்பட்ட குழுவுக்கும் இடையிலான மோதலே இந்த வன்முறைக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தின் உண்மை காரணங்களை கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More