கிளிநொச்சியில் இருந்து வந்ததாகக் கூறப்படும் கும்பலின் வாள் வெட்டு தாக்குதல்; யாழில் மூவர் காயம்!
பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாள் வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, கிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் குழுவொன்று, நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து, அங்கு இருந்தவர்களை வாளால் தாக்கிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல், நாவாந்துறை பகுதியில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலவி வந்ததாகக் கூறப்படும் தனிப்பட்ட முரண்பாட்டின் பின்னணியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பட்டா ரக வாகனமொன்றில் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலின் முழுப் பின்னணி மற்றும் காரணங்கள் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More