சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளை வறிதாக்கி வடமாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடைக்கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிரூபத்தை நகர சபைக் கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து, அதன் பிரதியைத் தூக்கி வீசினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் அவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களினால் கடந்த யூன் 24 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் உப தவிசாளரின் பதவி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவி ஆகிய இரண்டும் வறிதாக்கப்பட்டன.
ஆளுநரின் இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் சார்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு இன்றைய தினம் திங்கட்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. எனினும், மனு தொடர்பில் எதிர்மனுதாரர்களுக்கு அழைப்புக் கட்டளை (Notice) வழங்குமாறு உத்தரவிட்ட நீதிமன்று, வழக்கின் அடுத்தகட்ட விசாரணைகளை ஒத்திவைத்துள்ளது.
ஆளுநரின் இந்த அதிரடி நீக்க நடவடிக்கை மற்றும் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு ஆகியவை வடபகுதி உள்ளூராட்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
#Chavakachcheri #JaffnaHighCourt #NorthernProvince #SriLankaNews #LocalGovernment

