56
வலி. வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது வாரமாகவும் தங்களின் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் வலி. வடக்கு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், தங்களின் பூர்வீக நிலங்களை இழந்து தலைமுறை தலைமுறையாக முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
“எங்களின் சொந்த நிலங்களில் இராணுவம் தங்கி இருப்பது மட்டுமன்றி, அங்கு பெருமளவில் விவசாய நடவடிக்கைகளையும், வர்த்தக நிலையங்களையும் அமைத்து லாபம் ஈட்டி வருகிறது. ஆனால், நிலத்தின் சொந்தக்காரர்களான நாங்களோ வாழ்வாதாரமும், சொந்த வீடும் இன்றி அகதிகளாக வாழ்கிறோம்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
காவற்துறையின் தடைக்கட்டுப்பாடுகள்:
இன்றைய போராட்டத்தின் போது, கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் தற்காலிகக் கொட்டகை (பந்தல்) ஒன்றை அமைக்க முயன்றனர். எனினும், சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறையினர் பந்தல் அமைப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அதனைத் தடுத்து நிறுத்தினர்.
காவற்துறையின் இந்தத் தடையையும் மீறி, கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் வீதியில் அமர்ந்து “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” எனத் தொடர் முழக்கங்களை எழுப்பினர். தங்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
Spread the love

