Home உலகம்ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ்!

by admin

  ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரியாகே (Ariake) மற்றும் யாட்சுஷிரோ (Yatsushiro) கடலோரப் பகுதிகளுக்கு 1 மீற்றர் உயரம் வரை சுனாமி அலைகள் எழக்கூடும் என ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் சுனாமி அபாயம் நீங்கியதை அடுத்து எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

 குமாமோட்டோ பகுதியில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களின் கூரைகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதுடன், சில இடங்களில் தீ விபத்துகளும் பதிவாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக சுமார் 48,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஷிங்கான்சென்’ (Shinkansen) அதிவேக தோட்டா புகையிரதங்கள்  மற்றும் உள்ளூர் புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. குமாமோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதையும் மூடப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியத்திற்கு அருகில் அமைந்துள்ள செண்டாய் (Sendai) மற்றும் கென்காய் (Genkai) அணுமின் நிலையங்களில் எந்தவித பாதிப்புகளோ அல்லது அசாதாரண சூழலோ ஏற்படவில்லை என ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசாங்கம் உடனடியாக நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் ஜப்பான் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 #JapanEarthquake #Kumamoto #Japan #TsunamiAlert #WorldNews #BreakingNews

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More