சிரியாவின் பாலைவனப்பகுதி ஒன்றில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதல் ஒன்றில், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் காலிப் அபு பக்ர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டாரா என்பது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விசாரணை மேற்கொண்டுள்ளது.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதிp நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில், பாக்தாதியுடன் மேலும் 330 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைநகராக விளங்கிய ராக்காவில், ஐ.எஸ் அமைப்பின் கவுன்சில் கூட்டத்தை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது பாக்தாதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பாக்தாதி கொல்லப்பட்டதை உறுதிபடுத்த முடியவில்லை என அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கேர்னல் ஜோன் டோரியான் தெரிவித்துள்ளார். அதேநேரம் பாக்தாதி கொல்லப்பட்டமை தொடர்பாக சிரிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.