மேற்கு வங்க மாநிலத்தில் ‘கூர்க்காலாந்து’ தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8வது நாளாக தொடர்கின்றது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பேரணியாகச் சென்ற கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தொண்டர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஜிஜேஎம் தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில்இ அங்கு நிலைமை யைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸ் படையும், ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது இறந்தவரின் உடலை ஊர்வலமாக எடுத்து வந்து ஜிஜேஎம் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இணக்கமான சூழலில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வன்முறையை கையாள்வதால் பிரச்சினைக்குத் தீர்வு காண உதவாது எனவும் டார்ஜிலிங் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.