குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டால் படைவீரர்கள் தண்டிக்கப்படுவர் என புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் பலம் ஒழுக்கமும் அர்ப்பணிப்புமாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த இரண்டு காரணிகளும் இல்லாமல் வெறும் சீருடை அணிந்து கொள்வதனால் நல்லதொரு இராணுவத்தை உருவாக்கிவிட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தி வரும் தரப்பினர் குற்றச் செயல்கள் இடம்பெற்ற போது அந்த இடத்தில் இருந்தவர்களா என்பது சந்தேகமாகும் என அவர் தெரிவித்துள்ள அவர் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினர் நாட்டில் இரண்டு சட்டங்களுக்கு கட்டுபட்டவர்கள் எனவும் அவர்கள் இராணுவ மற்றும் பொதுச் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் எனவும் இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் மிகவும் குறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் எவரேனும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.