யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் முதலில், எமது மக்களது உணர்வு ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அவை தீர்க்கப்பட்டால் மாத்திரமே தேசிய நல்லிணக்கமானது உணர்வுப்பூர்வமானதாகவும், வலுவுள்ளதாகவும் அமைவதற்கு சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்கவோ, இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை விட்டுக் கொடுக்கவோ ஒரு போதும் விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகிறார்கள். அந்த வகையில், எமது மக்களது உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூறும் வகையில் ஒரு பொதுவான நினைவுத்தூபி ஒன்றினை அமைப்பதற்கும், அதற்கென ஒரு தினத்தைப் பிரகடனப் படுத்துவதற்குமாகவே மேற்படித் தனி நபர் பிரேரணை என்னால் இங்கு முன்வைக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.