189
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நல்லூர் பகுதியில் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் அன்றைய தினம் இரவினை யாழ்.கோம்பயன் மணல் மயானத்தில் கழித்ததாக யாழ்.போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஆலய பின் வீதியில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை மற்றுமொரு மெய்பாதுகாவலர் காயமடைந்து இருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
குறித்த சந்தேக நபர் போலீசாரிடம் வாக்கு மூலம் அளிக்கையில் , மாச்சனின் சவாலுக்காகவே துப்பாக்கியை பறித்தேன் என தெரிவித்தார்.அது தொடர்பில் மேலும் வாக்கு மூலத்தில் தெரிவிக்கையில் ,
சவாலுக்கவே துவக்கை எடுத்தேன்.
சனிக்கிழமை நல்லூருக்கு பின் வீதியில் உள்ள எனது வீட்டில் மது அருந்தி விட்டு , அந்தச் சந்தியில் (பருத்தித்துறை வீதி , கோவில் வீதி சந்தி ) வந்து நின்றோம். அப்போது கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவரை காட்டி ” உனக்கு தைரியம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்துச் சுடடா பார்ப்பம் ” என்று எனது மச்சான் சவால் விட்டான். அப்போது நான் பொலிசாரின் துவக்கை எடுக்கேக்க அது தெரியாமல் சுடுபட்டு விட்டது.
ஸ்கூட்டரை பறித்தேன்.
அதன் பின்னர் பிஸ்டலைக் காட்டி வீதியால் வந்தவரது ஸ்கூட்டரைப் பறித்து. ஸ்கூட்டரில், ஆடியபாதம் வீதி ஊடாக கல்வியன்காட்டுப் பகுதிக்குச் சென்று அங்கிருந்து அரியாலைக்குச் சென்றேன்.
அரியாலை பேச்சி அம்மன் கோயிலுக்குப் பின்னால் ஸ்கூட்டரைப் போட்டுவிட்டு திருநகர் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன்.
மயானத்தில் இரவை கழித்தேன்.
அங்கு பெரியம்மாவிடம், போதையில் பொலிஸ் ஒருவருக்கு அடித்து விட்டேன். பொலிஸ் என்னைத் தேடுகிறது என சொல்லி. பெரியம்மா வீட்டிலேயே உடையை மாற்றிவிட்டு ஓட்டுமடம் பகுதியில் உள்ள கோம்பயன்மணல் சுடலையில் தான் அன்றைய இரவைக் கழித்தேன்.
சரணடைந்தேன்.
மறுநாள் பகல் நாவந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் நின்றேன். அன்றிரவு கொட்டடியில் உள்ள மாமாவின் வீட்டுக்குச் சென்றேன். நல்லூரில் நடந்த சம்பவத்தை மாமா அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், என்னை அங்கு கண்டதும் மாமா உடனடியாக எனது அப்பாவுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் வந்ததைக் கூறினார். மாமா என்னை பொலிஸில் சரணடையுமாறு கூறினார். அதன்படி மாமாவுடன் வந்து பொலிஸில் சரணடைந்தேன். என போலீசாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார் என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரின் உடைகள் மீட்பு.
அதன் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், திருநகரில் உள்ள சந்தேகநபரின் பெரியம்மா வீட்டுக்கு பொலிஸ் வாகனத்தில் கறுப்புத்துணியால் மூடிய நிலையில் சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தும்போது அணிந்திருந்த உடைகள் உள்ளிட்ட சில பொருட்களை அங்கு போலிசார் மீட்டனர்.
புலிகளின் சைபர் படைப்பிரிவில் இருந்தார்.
சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன் (வயது–39). எனும் குறித்த நபர் 1995ஆம் ஆண்டிலிருந்து 1998ஆம் ஆண்டு கால பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘சைபர்’ பிரிவு படையணியில் இருந்துள்ளார்.
1998ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதற்கான கடிதம் கொடுத்துள்ளார். அமைப்பிலிருந்து இடையில் விலகுவதன் காரணமாக விடுதலைப் புலிகள் தண்டனை கொடுத்துள்ளனர். அதன் பிரகாரம் விடுதலை புலிகளின் இரணைமடு முகாமில் சமையல் வேலை செய்யும் தண்டனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு திருமணம்.
அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு கால பகுதியில் முழங்காவில் பகுதியில் வசித்துள்ளார். முழங்காவிலில், யாழ்ப்பாணம் மண்கும்பானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்துள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.
அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு மண்கும்பானில் சந்தேகநபர் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். ஆரம்பத்தில் கூலி வேலைகள் செய்துள்ளார். பின்னர் ஐஸ் பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது வேலணையில் மற்றொரு திருமணம் செய்துள்ளார். இவருக்கும் 4 பிள்ளைகள் பிறந்துள்ளனர். தற்போது குறித்த நபர் வேலணை 4ஆம் வட்டாரத்தில் தொடர்ந்து வசித்து வருகின்றார். யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பேருந்துச் சேவையில் சாரதியாக பணியாற்றி வருகின்றார். எனவும் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் அமைப்பில் இருந்தவர் என்பது வதந்தி.
எனது கணவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி என கூறுவது வதந்தி. எனது கணவர் இதனை (துப்பாக்கி சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார் என சந்தேக நபரின் மனைவி தெரிவித்தார்.
கணவரை தேடி கடந்த சனிக்கிழமை முதல் பொலிசார் எமது வீட்டுக்கு பல தடவைகள் வந்து தேடுதல் நடத்தி எம்மை தீவிரமாக விசாரித்தார்கள். தற்போது எனது கணவர் பொலிசில் சரணடைந்து விட்டார் என மேலும் தெரிவித்தார்.
8ஆம் திகதி வரையில் விளக்கமறியல்.
குறித்த சந்தேக நபர் யாழ். பொலிசாரினால் யாழ். நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டு உள்ளார்.
Spread the love