சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு வன்புணர்வு வழக்கில் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஹரியானாவில் பரவிய வன்முறையாலும், அதற்கு எதிர்வினையாக பொலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
வன்முறை, தீவைப்பு, போலீஸ் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250. வன்முறை மையம் கொண்டிருந்த பஞ்ச்குலா நகரின் போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகர் அருகே உள்ள பஞ்ச்குலாவில் தீர்ப்பு கொடுத்த சி.பி.ஐ. நீதிமன்றம் அமைந்துள்ளது. ராம் ரஹீம் சிங்கின் அமைப்பான தேரா சச்சா சௌதா வின் தலைமையகம் ஹரியானா மாநிலம் சிர்சாவில் அமைந்துள்ளது. இரு இடங்களிலும், டில்லியின் சில பகுதிகளிலும் தீர்ப்பளித்தவுடன் பரவிய வன்முறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக ஓர் உயர் பொலீஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு ராணுவ படை அணிகளும், 10 துணை ராணுவப் படை அணியினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
2002ல் இரண்டு பெண்கள் அளித்த பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில் தற்போது 50 வயதாகும் தேரா சச்சா சௌதாவின் தலைவரான ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் தீர்ப்பளித்தார்.
இசட் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் ராம் ரஹீம் சிங்குக்கு என்ன தண்டனை என்பதை ஆகஸ்டு 28-ம் தகதி நீதிபதி அறிவிப்பார்.
சமூக வலைத்தளம்
இந்தத் தீர்ப்பும் அதனைத் தொடர்ந்த வன்முறையும் சமூக வலைத் தளங்களில் தீவிர விவாதங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.
கோரக்பூர் குழந்தை மரணங்கள், முசாபர் நகர் ரயில் விபத்து, சிர்சா-பஞ்ச்குலா கலவரம் ஆகியவை பாஜக-வின் நிர்வாகத் திறமைக்கு சான்று என்று முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தண்டனைக்குள்ளான ராம் ரஹீம் சிங்குக்கு ஆதரவாக பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசியுள்ளதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நாள் முழுதும் பணியாற்றி சகஜ நிலை திரும்பவும், தேவையான உதவிகளைச் செய்யவும் வேண்டுமென அதிகாரிகளைக்கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
3ம் இணைப்பு – பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் சாமியாருக்கெதிரான தீர்ப்பின் பின் ஏற்பட்ட வன்முறைகளில் 28 பேர் உயிரிழப்பு – 250 பேர் காயம்
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் மீத் ராம் ரஹீம் சிங் சாமியாhர் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மேற்கொண்டு வரும் வன்முறை காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதுடன் 250க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து டெல்லியில் இருந்து அரியானா செல்லும் புகையிரதங்கள்; ரத்து செய்யப்பட்டுள்ளன.
வன்முறையை கைவிட்டு அமைதி ஏற்பட உதவிட வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு அரியானா மற்றும் பஞ்சாப் மாநில உயர்நீதிமன்றம் இன்று மாலை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரியானா முதல் மந்திரி கத்தார் எச்சரித்துள்ளார்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகிறார் எனவும் குண்டர்களை ஒடுக்க ராணுவத்தை இறக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குர்மீத் ராம் ரஹிம் சிங் சாமியார் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இன்று அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 2 -பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வன்முறைகள் காரணமாக 17 பேர் பலி – 200க்கும் மேற்பட்டோர் காயம்
Aug 25, 2017 @ 13:02
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தேரா சச்சா சவுத் சாமியார் ராம் ரஹீமின் ஆதவாளர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மேற்கொண்டு வரும் வன்முறை காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வன்முறையை கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகிறார் எனவும் குண்டர்களை ஒடுக்க ராணுவத்தை இறக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறை – ஊடக வாகனங்கள் , செய்தியாளர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல்
Aug 25, 2017 @ 11:22
பாலியல் பலாத்கார வழக்கில் மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்ததனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானாவில் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஊடக வாகனங்கள் மீதும் செய்தியாளர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹரியானாவில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமியார் ராம் ரஹீம் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வன்முறையாளர்களை விரட்டியடிக்க காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வன்முறையாளர்கள் மீது தடியடிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பஞ்சாப் மாநிலம் மலோட்டில் புகையிரத நிலையம் மற்றும் பெட்ரோல் பங்குக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் பதின்டாவிலும் வன்முறை வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பஞ்சாப், ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.