குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி யாழில்.உறுதி அளித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா யாழ்.இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இருந்தார்.
அதன் போது அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் , அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனைஇன்றி விடுவிக்க கோரியும் , ஜனாதிபதி நிகழ்வில் கலந்து கொள்ள இருந்த இடத்தில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அதன் போது போராட்டக்காரர்களை சந்தித்து ஜனாதிபதி கலந்துரையாடினார். அதன் போது வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் , ஜனாதிபதியிடம் நீங்கள் தமிழ் மக்கள் வாக்களித்தே ஜனாதிபதி ஆகினீர்கள். அன்னப்பறவை பாலினையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் தண்ணீரை தவிர்த்து , பாலினை மாத்திரம் பருகும் அதேபோல நீங்களும்நாட்டில் வாழும் சிங்கள தமிழ் மக்களில் தமிழ் மக்களை தவிர்த்து சிங்கள மக்களின் நலனில் அக்கறை செலுத்து கின்றீர்கள். அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும். அதில் முதல் கட்டமாக அனுராத புர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்த ஜனாதிபதி , நான் தமிழ் மக்களின் வாக்குகளில் ஜனாதிபதியானேன், என்பதனை மறக்கவில்லை. தமிழ் சிங்கள மக்கள் என பிரித்து பார்ப்பதில்லை. அனைவரும் ஒரு நாட்டு மக்கள். அரசியல் கைதிகள் விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பேன். அதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவேன் என உறுதி அளித்தார்.