குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தமிழ் மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறப்படும் இளைஞர் யுவதிகளை அவர்களின் குடும்பத்தினர் ஓமந்தை இராணுவ முகாமில் இராணுவத்தினரிடம் கையளித்து உள்ளனர். இது திட்டமிட்டு கடந்த கால அரசாங்கத்தால் இனப்படுகொலை செய்தமைக்கும் அப்பால் கொடூரமாக கொன்று குவித்து உள்ளனர். அதனால் தான் காணாமல் போனோர் அலுவலகம் திறப்பது தொடர்பில் பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியும் , ஒரு வருட காலமாக ஜனாதிபதி அதற்கு கையொப்பம் வைக்கபப்டாத நிலையில் தான் காணமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கபப்ட்டது.
நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தான் 1400 மில்லியன் ரூபாய் நிதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது காணமல் போனோர் அலுவகம் ஊடக விசாரணைகள் நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வினை வழங்க வேண்டும். குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அது தான் உண்மையான நீதி.
எங்கள் நாட்டில் நடந்த குற்றங்களை எங்கள் நாட்டில் தான் விசாரிக்க வேண்டும். அதனை வெளிநாட்டில் விசாரிக்க முடியாது. காணாமல் ஆக்கபப்ட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை வடக்கு கிழக்கை சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம் என தெரிவித்தார்.