உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்தமைக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல்களை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த பெண்பிரதிநிதித்துவம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு, முக்கியமான விடயமாக அமையுமென பிரத்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் )James Dauris) தெரிவித்துள்ளார்.
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பிறப்பு ஆகியவற்றை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் இவ்வருடத்தில் முன்னெடுத்த செயற்பாடுகளை பிரித்தானிய வரவேற்பதாகவும்,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதன் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும்,
காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்த ஜனாதிபதி அனுமதி வழங்கியமை, மற்றும் நிலக்கண்ணி வெடிகளை முற்றாக தடைசெய்யும் ஒட்டாவா ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டமை ஆகியன சிறந்த விடயங்கள் எனவும், பிரத்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கு, இலங்கை மேலும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும், குறிப்பாக முதலீடு செய்வதற்கு இலகுவான இடமாக இலங்கையை மாற்றுவது அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளதென தெரிவித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர், நாட்டு மக்கள் அனைவருக்கும் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.