குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.விகாராதிபதியின் பூதவுடலை யாழ்.முற்றவெளி பகுதியில் தகனம் செய்தமை உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் தவறு என தமிழரசு கட்சியின் இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடம் சுடுகாடோ அல்லது இடுகாடோ இல்லை. உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரமும் அது தவறு. உள்ளூராட்சி சட்டத்தின் பிரகாரம் அதில் அனுமதி வழங்க முடியாது.
அங்கு தகனம் செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியதாக கூறப்பட்டது. எது எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என தெரியவில்லை. விகாரதிபதியின் பூதவுடல் அரச பலத்துடன் , உள்ளூராட்சி சட்டத்திற்கு முரணாக தகனம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
விகாராதிபதியின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி வெள்ளிக்கிழமை நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு , விசாரணைகளின் பின்னர் சடலத்தை தகனம் செய்ய யாழ்.நீதிவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.