குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்றுக் கொள்வதல் தொடர்ந்தம் சிக்கல் நிலைமை நீடித்து வருகின்றது. தகவல் அறியும் சட்டத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரியுள்ள போதிலும் அந்த ஆவணம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அஷ்ரபின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி தகவல் அறியும் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் ஆஜராகியிருந்த தேசிய சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி நதீரா ரூபசிங்கவிடம் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
அஷ்ரபின் மரண விசாரணை தொடர்பிலான அறிக்கையின் நான்கு பக்கங்கள் மாத்திரமே சுவடிகள் திணைக்களத்தில் உள்ளதாகவும், அஷ்ரப் என்ற பெயரில் வேறு எந்த ஆவணங்களும் தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் ஆணைக்குழு முன் குறிப்பிட்டதாக அமர்வில் கலந்துகொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சாதாரண விடயமாகக் கருத முடியாது என இதன்போது தகவல் அறியும் ஆணைக்குழுவின் உறுப்பினரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ரோஹினி வெல்கம சுவடிகள் திணைக்களத்திற்குக் கூறியுள்ளார்.
அஷ்ரபின் மரண விசாரணை அறிக்கை காணாமற்போகவில்லை எனவும் திருடப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும் ரோஹினி வெல்கம குறிப்பிட்டதாக குறித்த சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அஷ்ரப் மரண விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் பிரதியையாவது பெற்றுத்தருமாறும் இதன்போது ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி வெல்கம சுவடிகள் திணைக்களத்திற்கு கூறியுள்ளார். பெப்ரவரி 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வில் அது தொடர்பிலான பதிலை வழங்குமாறு இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.