ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் 19 ஆம் திகதி நிரப்பப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை கடந்த வாரம் அலரிமாளிகையில் முதன்முதலாக கூடியதுடன், அதில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அன்றைய தினம் இடம்பெற்ற பதவி நியமனம்பற்றிய முடிவு ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அரசியல் சபை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக்காக அதிகாரம் மிக்க அரசியல் சபையொன்று கடந்த 7ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இச்சபைக்கு பதவி வழியாக நியமனம் பெற்றுள்ளனர். அத்துடன் நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்கிரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளீன் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.