குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு. தமிழ்ச்செல்வன்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யார் நடத்துவது என்ற வாதப் பிரதிவாதங்களின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அதனை வடக்கு மாகாண சபையே நடத்தும் என நேற்று (07.05.18) அறிவித்துள்ளார்
அறிவித்து அவர் தெரிவித்த கருத்துக்களில் முக்கியமானது என்னவெனில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பிரதேச சபைக்குட்பட்ட காணியாகும். எனவே உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் அந்த இடத்தில் நிகழ்வை நடத்தும் சட்ட ரீதியான உரிமை வடக்கு மாகாண சபைக்கே உரியது என்ற கருத்தே.
ஆதாவது சட்டரீதியாக தனது அமைச்சின் கீழ் வருகின்ற ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான காணியில் என்ன செய்ய வேண்டும் என்பது எனது அமைச்சே தீர்மானிக்கும். என்பதே முதலமைச்சரின் கருத்து.
இதே வேளை இந்த இடத்தில் அவர் சொல்லாமல் சொன்ன செய்தி என்னவெனில் எனது அமைச்சின் கீழ் வருகின்ற பிரதேச சபையின் காணிக்குள் இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றதில் எங்களை தவிர வேறு யாராவது நினைவேந்தலை நடத்த முற்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைக்குச் செல்ல வேண்டி வரும் என்பதே. அவ்வாறு செல்கின்ற போது சட்டத்தின் படி எங்களுக்கு உரித்தான இடத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதனை தீர்மானிக்கும் உரிமையினையும் சட்ட எங்களுக்கே அளிக்கும் என்பதே.
எனவே சட்டரீதியாக தனது காணிக்குள் நிகழ்வை நடத்தும் உரிமை காணிக்குச் சொந்தக்காரான கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கே உரியது. காணி உரிமையாளரின் அனுமதி இன்றி வேறு எவரும் அக் காணிக்குள் எதனையும் செய்ய முடியாது. அவ்வாறு முற்பட்டால் சட்டத்தின் முன் தடுத்து நிறுத்த முடியும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யார் நடத்த வேண்டும் என்ற போட்டியின் விளைவில் வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒரு புறமிருக்க
கடந்த மாதம் 23 திகதி இடம்பெற்ற கரைச்சி பிரதேச சபையின் முதல் அமர்வின் போது ஆளும் கட்சியினரால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஆதாவது மாவீரர் துயிலுமில்லங்களை பிரதேச சபையின் ஆளுகைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பிரேரணையே. இதன் மூலம் துயிலுமில்லங்கள் பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுசெல்லப்பட்டு. அதன் பின்னர் அதன் உரிமை பிரதேச சபைக்குரியதாக மாறிவிடும். இதன் பின்னர் துயிலுமில்லக் காணிக்குள் எந்த விடயத்தை செய்ய வேண்டும் என்றாலும் பிரதேச சபையின் அனுமதியுடனயே மேற்கொள்ள வேண்டும்.
பிரதேச சபைகளை கட்டுப்படுத்துவது மாகாண உள்ளுராட்சி திணைக்களம். மாகாண உள்ளராட்சிக்கு பொறுப்பாக உள்ளுராட்சி அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். வடக்கை பொறுத்தவரை உள்ளுராட்சி அமைச்சராகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் காணப்படுகின்றார். இங்கே மாகாண சபை இல்லாத காலத்தில் இந்த திணைக்களங்கள் உட்பட வடக்கின் நிர்வாகம் ஆளுநரின் கீழ் சென்றுவிடும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஆளுநரின் பணிப்பிற்கு அமையவே மாகாண உள்ளுராட்சி திணைக்களமும் அதன் கீழ் இயங்குகின்ற பிரதேச சபைகளும் செயற்படவேண்டும்.
எனவே இப்போது துயிலுமில்ல காணிக்குள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதனை ஆளுநரே தீர்மானிப்பார். ஆளுநரையும் மீறி துயிலுமில்லக் காணிக்குள் ஏதேனும் செய்ய முற்பட்டால் இப்போது வடக்கு முதலமைச்சர் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு குறிப்பிட்டது போன்று அவ்வாறான ஒரு சூழலில் ஆளுநரும் துயிலுமில்லம் காணி பிரதேச சபைக்கு சொந்தமானது எனவே பிரதேச சபைகள் எனக்கு கீழ் வருகின்ற அரச நிறுவனம் ஆதலால் சட்டரீதியாக அங்கு என்ன செய்யவேண்டும் என்பதனை நானே தீர்மானிப்பேன். இது சட்டரீதியானது என்பார்.
இந்த நிலைமையினை இலகுவாக கூறின் கரைச்சி பிரதேச சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் தா.ரஜினிகாந் குறிப்பிட்டது போல் சொந்த காசில் சூனியம் வைத்தது போன்றதே. இவ்வாறான ஒரு சூழ் நிலையில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி போன்று ஒரு ஆளுநர் இருந்தால் நிலைமை எப்படியிருக்கும்?
இதனை தவிர துயிலுமில்லம் என்றாலும் சரி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்றாலும் சரி அவை எச் சந்தர்ப்பத்திலும் எந்த அரச நிர்வாக அலகுக்குள்ளும் இல்லாது பொது அமைப்பு ஒன்றின் கீழ் இருக்கின்றவாறு பார்த்துக்கொள்வதே தமிழ் மக்களை பொறுத்தவரை எக்காலத்திற்கும் பாதுகாப்பானது.
இலங்கையை பொறுத்தவரைக்கும் அதன் தற்போதைய சட்டத்திட்டங்களுக்கு அமைவாகவும் அரச நிர்வாக கட்டமைப்புகள் எல்லாவற்றையும் மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரத்தைம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் துயிலுமில்லம் பிரதேச சபைகளுக்குச் சொந்தமானதாக்கினாள் மத்திய அரசும் துயிலுமில்லம் விடயத்தில் தலையிடும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் . அதிகாரிகள் எப்போதும் அரசு என்ன சொல்கிறதே அதனையே செய்வார்கள். அவர்கள் சட்டத்திற்கு அமைவாகவே செயற்படுவார்கள். எனவே துயிலுமில்லம் விடயத்தில் எல்லோரும் குறிப்பிடுவது போன்று அதனை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தூரநோக்கற்று கையாள்வதனை விடுத்து அதனை ஒரு பொது அமைப்பொன்றின் கீழ் கொண்டுவரவேண்டும். அதுவே எக்காலத்திற்கும் பாதுகாப்பானதாக காணப்படும்.