குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிரான வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி ஆறு விமானங்கள் ஆறு விமான பஸ்கள் ஆகியனவற்றை தாக்கி அழித்து 5, 505 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், கொழும்பு மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேராவிடம் கோரியுள்ளது. இந்தக் கோரிக்கையை ஆணையாளர் ஏற்றுக்கொண்டு வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.
தற்கொலை அங்கிகள், கைக்குண்டுகள், கைத்துப்பாக்கி போன்றவற்றை வைத்திருந்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தொடர்ந்து அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்னசிங்கம் புஸ்பகுமாரன் எனப்படும் நிர்மல ரஞ்சன் என்பவருக்கு எதிரான வழக்கே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படாமல் தலைமறைவாகியுள்ள இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யுமாறு ஆணையாளர் ஐராங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.